50 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் இருளர் இன மக்கள்- ஒளி பிறக்குமா...?
கடலூர், ஆக.16-
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட சேதுவராயன்குப்பம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரின் ஒதுக்குப்புறமாக குட்டை புறம்போக்கில் இருளர் இன சமூகத்தினர் ஒன்பது குடும்பங்கள் தற்காலிக பனை ஓலை குடிசை அமைத்து கடந்த 50 வருடமாக வசித்து வருகின்றனர்.
இயற்கை பேரிடர் காலங்களில் மிகவும் அவதி அல்லல்படும் சூழ்நிலைக்குத் தள்ளப் படுவதாகவும் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் எங்களின் குழந்தைகளை படிக்க வைக்க விரும்புவதாகவும் ஆனால் எங்களை எந்த அரசும் கண்டு கொள்வதில்லை என்று இருளர் இன மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், இது தொடர்பாக பலமுறை அரசு அதிகாரிகளிடம் எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் நிரந்தரமாக இப்பகுதியில் வசித்திட ஆவணம் செய்யவும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அதில் அரசு வீடு அமைத்து தர ஆவணம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
இந்நாள் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நாங்களும் மனிதர்கள்தானே என இருளர் இன மக்கள் வேதனை கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் எங்களது ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சீரான் மூலமாக வேப்பூர் வட்டாட்சியர் செல்வமணி, விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம் அதன் அடிப்படையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அமித் குமார் நேரில் வந்து விசாரணை செய்து உள்ளார்.
மேலும் முந்தைய ஆட்சிக்காலத்தில் கூட பலமுறை கோரிக்கைகள் வைத்ததாகவும் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இந்நாள்வரை எடுக்கவில்லை எனவும் தற்போது பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருணையின் அடிப்படையில் எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வில் ஒளியை ஏற்றிட கேட்டுக்கொள்கிறோம் என இருளர் இன மக்கள் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
காலச்சக்கரம் சுழற்சியால், இனியாவது இவர்களது வாழ்வில் ஒளி பிறக்குமா...? அல்லது இருள் தொடருமா ...? என்பதை பொருத்திருந்தான் பார்க்கவேண்டும்...


No comments
Thank you for your comments