தலிபான் அரசை அங்கீகரிக்க நிபந்தனைகள் - G-7 நாடுகள்அவசர கூட்டத்தில் தீர்மானம்
வாஷிங்டன் :
ஆப்கானிஸ்தானத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அரசை அங்கீகரிப்பதற்கு உலக நாடுகள் எதுவும் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க கூடாது. அதற்கு பதிலாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தலிபான் அரசின் அங்கீகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில்தான் தலிபான் அரசு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஜி7 நாடுகளின் அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஜி7 நாடுகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கூட்டறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஜி-7 நாடுகளின் உறுதி தளர்ந்து விட்டதாக உலக நாடுகள் எதுவும் கருதக்கூடாது.
ஆப்கானிஸ்தானத்தில் இருந்து பயங்கரவாதம் மற்ற நாடுகளுக்கு பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதால் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஜி-7 நாடுகளின் கூட்டத்துக்கு இந்தியாவையும் அழைப்பது அவசியமாகும்.
ஹார்ன் ஆப் ஆப்பிரிக்காவில் பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் ஒன்றாக இணைந்து தங்கள் பலத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் ஆப்பிரிக்க யூனியன் அமைப்பை ஜி 7 கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பதும் பொருத்தமாக அமையும்.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராக பிராந்திய அளவில் நாடுகள் அணி சேர்வதும் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதும், பயங்கரவாத அபாயம் உள்ள பகுதிகளை கூர்ந்து கவனிப்பதும் பிராந்திய அளவில் சாத்தியமானதாகும்.
உலகின் எந்தப் பகுதியில் பயங்கரவாத ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டாலும் அங்கு உடனடியாக தீர்க்கமான எதிர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
உலகில் உள்ள எந்த ஒரு நாடும் தனிப்பட்டமுறையில் தலிபான் அரசை அங்கீகாரம் செய்யக்கூடாது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியமாகும்.
ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தலிபான் அரசு தனது வாக்குறுதிகளை முன் வைக்க வேண்டும் அந்த வாக்குறுதிகள் தலிபான் அரசைக் கட்டுப்படுத்துகிறவைகளாக பாதுகாப்பு கவுன்சில் அமைக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு பயங்கரவாதச் செயல்களை தூண்டும் அமைப்புக்கள் எதனையும் அனுமதிக்கக்கூடாது என்ற நிபந்தனை மட்டும் போதுமானது அல்ல.
பெண்கள் சிறுமியருக்கு சமத்துவமும் சம உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.
ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் மத சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்
தலிபான் அரசு ஜனநாயக முறையில் தேர்தல்களை நடத்த வாக்குறுதி அளிக்க வேண்டும்
போதைப்பொருள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆப்கானிஸ்தானத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த வாக்குறுதிகள் தொடர்பாக ஆப்கானிஸ்தான் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அது மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
தலிபான்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்கும் அந்த வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்யவும் உரிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
தலிபான்கள் தாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புவதற்கு எந்த அறிகுறியும் கிடையாது.
ஆகவே ஜி7 நாடுகள் தலிபான்களை தனிமைப்படுத்தவும் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவர்கள் தவற விடும் நிலையில் தலிபான் அரசு மீது தடைகளை விதிக்கவும் தயாராக வேண்டும்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்புவோர் முறையாக வெளியேற அவகாசம் அளிக்க வேண்டும். தன்னிச்சையாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டவர் வெளியேறுவதற்கு உதவும் ராணுவ ஆதரவை முடிவுக்குக் கொண்டுவர யாரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதில்லை.
ஆப்கானிஸ்தானத்தில் இருந்து வெளியேறும் எண்ணிக்கைக்கு ஒரு உயர்ந்தபட்ச கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.
நலிந்த பிரிவினரை பாதுகாப்பதற்கும் உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முறைப்படி மேற்கொள்வது மட்டுமே அளவுகோலாக அமைய வேண்டும்.
ஆப்கானிஸ்தானத்தில் இருந்தும் வெளியேறுவோர் மற்ற நாடுகளில் அகதிகளாக காலடி எடுத்து வைப்பது மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் ஆகியவை குறித்து உலக நாடுகளின் ஒத்துழைப்போடு ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி 7 நாடுகள் கேட்டுக்கொள்கிறது.
ஆப்கானிஸ்தானத்தின் உள்ளேயும் வெளிநாடுகளிலும் உலக உணவு திட்ட பணிகள், ஐநா அகதிகள் கமிஷன் பணிகள் இடையீடு இல்லாமல் தொடர வேண்டும். இவ்வாறு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ்ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய ஏழு நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

No comments
Thank you for your comments