நீட் தேர்வுக்கு விலக்கு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியான பதில்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை காண வீடியோவை கிளிக் செய்யவும்👆
சென்னை
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குக்கோரும் சட்ட முன்வடிவு, நீட் தேர்வு தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி இராஜன் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையின்படி, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (18-8-2021) தெரிவித்துள்ளார்.
2021-2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது.
சட்டப்பேரவையில் 'நீட் தேர்வு விவகாரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
இங்கே எனக்கு முன்னால், தன்னுடைய கன்னிப் பேச்சை பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வகையிலே பல வினாக்களை எல்லாம் தொடுத்து , இங்கே நம்முடைய உறுப்பினர் திரு. உதயநிதி அவர்கள் பேசியிருக்கிறார்கள். எனவே, அந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிற துறையினுடைய அமைச்சர்களிடமிருந்து, மானியக் கோரிக்கை விவாதங்களின்போது, அதற்குரிய விளக்கங்களைப் பெறலாம். ஆனால், முக்கியமான ஒன்று; 'நீட்' பிரச்சினை குறித்து அவர் இங்கே அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுச் சொன்னார்.
நீட் பிரச்சினையைப் பொறுத்தவரையில், கட்சிப் பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து, அதற்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்ற நிலையிலே நாம் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த அடிப்படையிலேதான், தேர்தல் நேரத்திலே நாங்கள் உறுதிமொழி தந்தோம்.
'திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், 'நீட்' தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் நம்முடைய இலட்சியமாக இருக்கும். அதுகுறித்து நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்' என்று உறுதிமொழி தந்திருக்கிறோம்.
அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே, இதுபற்றி அலசி ஆராய்ந்து, பொது மக்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்டு, ஆய்வு அறிக்கையை அரசுக்கு வழங்கிட வேண்டுமென்று சொல்லி, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே இராஜன் அவர்கள் தலைமையிலே ஒரு குழு அமைக்கப்பட்டு, அவரும் அந்தப் பணியை நிறைவேற்றி, ஒரு அறிக்கையைத் தந்திருக்கிறார்கள். தற்போது அந்த அறிக்கை சட்டரீதியாகப் பரிசீலிக்கப்பட்டு, இந்தக் கூட்டத் தொடரிலேயே அதற்குரிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்து, அமர்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து சட்டப்பேரவையில் இன்று பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை காண கீழே உள்ள யூடியூப் வீடியோவை கிளிக் செய்யவும்
No comments
Thank you for your comments