எனது அரசு அல்ல, நமது அரசு! - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சென்னை
திமுக அரசுப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இன்று (14.8.2021) கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், எனது அரசாகத்தான் முதலில் இது உருவானது. இப்போது நான் சொல்கிறேன் - எனது அரசு அல்ல, நமது அரசு! என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில்,
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து இன்றோடு 100 நாட்கள் ஆகிறது.
அந்த பெருமையின் அடையாளமாக, கழக ஆட்சியையும் என்னையும் பாராட்டி உரையாற்றி இருக்கக்கூடிய, முன்வரிசையில் அமர்ந்திருக்கக் கூடிய பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் அத்தனைப் பேருக்கும் முதலில் எனது இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
100 நாட்கள் கடந்ததைப் பற்றி இங்கே நீங்கள் எல்லாம் பெருமையோடு பேசினீர்கள். ஆனால் எனக்கு அடுத்து வரும் காலத்தைப் பற்றிய நினைப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன் கழகத்துக்கோ, எனக்கோ இருந்த எதிர்பார்ப்பை விட இந்த 100 நாட்களில் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகி இருக்கிறது.
நீங்கள் எல்லாம் இப்போது பாராட்டினீர்கள் என்றால் பணியை முடித்துவிட்டதற்காக அல்ல, இன்னும் பணியைச் செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள், உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள். அதைத்தான் நான் உணர்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிக்காதவர்கள் கூட, இப்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். அந்தளவுக்கு ஒரு சிறப்பை, பெயரைப் பெற்றிருக்கிறோம். அந்தப் பெயரைக் காலம் எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணமாக இருக்கிறது.
என்னுடைய பணிக்குத் தோளோடு தோள் நிற்கும் நம்முடைய அமைச்சர் பெருமக்கள் - பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர் பெருமக்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - அத்தனைப் பேருக்கும் நான் மீண்டும் மீண்டும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இங்கே நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆட்சிக்கு வரும்போது, கொரோனா என்ற ஒரு பெருந்தொற்று நம்மைச் சூழ்ந்திருந்தது. அதனை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நாம் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம்தான். அந்தச் சத்தம் நம்மை நிம்மதியாக இருக்கவிடவில்லை. அதையும் தாண்டி, மருத்துவமனையில் இடம் இல்லை, ஆக்சிஜன் பற்றாக்குறை - இப்படி ஏதாவது ஒரு செய்தி வந்து நம் மனதை வாட்டி வதைத்துக்கொண்டே இருந்தது. இதையெல்லாம் சமாளிக்கத்தான் உடனடியாக ஒரு War Room-ஐ நாம் ஏற்படுத்தினோம். மக்களின் கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்டோம். அதை முடிந்த வரைக்கும் நாம் நிவர்த்தி செய்தோம். இன்னும் சொல்லப்போனால் கோரிக்கைகளே வராத, வர முடியாத ஒரு சூழ்நிலையை இப்போது உருவாக்கியிருக்கிறோம். இலட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியதும் அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும்தான், என்னைப் பொறுத்தவரை, இந்த 100 நாளில் செய்த சாதனையில் பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்.
'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரைப் போல இந்த அரசு நடவடிக்கை எடுத்தது’ என்று வருங்காலத் தலைமுறை சொல்லவேண்டும் நம்மைப் பற்றி.
தேர்தல் வாக்குறுதிகளை இப்போது - நான் முழுதாக எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லி உங்களையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்றிக்கொள்ள நான் தயாராக இல்லை - படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். நிறைவேற்றுவோம்! அதில் எந்த மாற்றமும் கிடையாது. அது உறுதி.
நேற்றைய தினம், முதல் நிதிநிலை அறிக்கையை நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் இங்கே தாக்கல் செய்திருக்கிறார்கள். நமது அரசின் நூறாவது நாளில், தமிழகத்தின் வரலாற்றில் பதிவாகக் கூடிய வகையில், நீங்கள் எல்லாம் பெருமையோடு சொன்ன அடிப்படையில், வேளாண்துறையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அனைத்துத் துறைகளுக்கும் தாயுள்ளத்தோடு திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரி இல்லாத நிதிநிலை அறிக்கையைக் கொடுத்துள்ளோம். இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம். படிப்படியாக அனைத்து வாக்குறுதியையும் நிச்சயமாக நிறைவேற்றிக் காட்டுவோம். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்!
இங்கே படமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னது என்னுடைய மனதில் இன்னும் ஆழமாக இருக்கிறது - ‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’. அவர் இருந்து செய்ய வேண்டியதை அவர் மகன் நிச்சயம் செய்வான் என்ற உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஐந்து ஆண்டு கால ஆட்சியில் 100 நாட்கள் என்பது பதினெட்டில் ஒரு சதவிகிதம்தான். ஆனால் இந்த 100 நாட்களில் இந்த அரசு செய்த சாதனைகளை நான் இங்கே பட்டியல் போட்டால் மூன்று மணிநேரம் ஆகும். அதனால் அதைப் பட்டியல் போட விரும்பவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அமைச்சர்களும் சொல்வார்கள், நானும் சொல்லக் காத்திருக்கிறேன்.
நாள் முழுக்க நாட்டுக்காக உழைக்கிறோம். ஒவ்வொரு நொடியும் மக்களுக்காகச் சிந்திக்கிறோம். தமிழ்நாட்டின் இழந்த பெருமையை மீட்டெடுக்க எங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும் நாட்களாக இந்த 100 நாட்கள் அமைந்துள்ளது. நிதி நிலைமை மட்டும்தான் கொஞ்சம் கவலை தரக் கூடிய வகையில் இருக்கிறது. அதையும் விரைந்து சீர் செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது; உங்களின் ஒத்துழைப்போடுதான். சீர்மிகு தமிழ்நாட்டை உருவாக்குவோம். இந்தப் பெரும் பொறுப்பை நான் என் தோளில் சுமக்கத் தயாராகி விட்டேன். நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையோடு எனது பயணத்தைத் தொடர்வேன்.
எனது அரசாகத்தான் முதலில் இது உருவானது. இப்போது நான் சொல்கிறேன் - எனது அரசு அல்ல, நமது அரசு! இதுதான் என்னுடைய கொள்கை. ஆக, எமது அரசு, நமது அரசு என்று சொல்லக்கூடிய அளவுக்குத்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. எனவே வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்! வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாட்களில் இரண்டு மடங்காக நாங்கள் உழைப்போம், உழைப்போம், உழைப்போம்!
நன்றி! வணக்கம்!
இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.

No comments
Thank you for your comments