சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா .... இரண்டு நாட்கள் புறகணிப்பு ...
சென்னை,
திமுக அரசு அதிமுக தலைவர்கள்மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து இன்று அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
தர்ணா போராட்டத்தை தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்குவதில் கவனம் செலுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.
கொடநாடு வழக்கில் குற்றவாளிகளான சயன், வாளையார் ரவி, மனோஜ் போன்றோருக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசு பழிவாங்கும் வகையில் செயல்படுவதாகவும் இதனை கண்டித்து சட்டப்பேரவையை இரண்டு நாட்களுக்கு புறக்கணிக்க உள்ளதாகவும் அதிமுக அறிவித்துள்ளது.
2021-2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது.
பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான மூன்றாம் நாள் விவாதம் தொடங்கியது. சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்ததும் அவர் பேச தொடங்கினார்.
கொடநாடு விவகாரத்தை தற்போது மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பிறகு, சட்டப்பேரவைக்கு வெளியே தரையில் அமர்ந்து, பொய் வழக்கு போடாதே என வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, துணைத்தலைவர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் திமுக அரசு பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் ஓ பன்னீர்செல்வம். அப்போது அவர் கூறியதாவது,
எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் வாய்ப்பு தராத போக்கு நிலவுகிறது. பொய்யான வழக்குகளை கொண்டு வந்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளை திமுக மேற்கொள்கிறது. எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம்.
திமுக அரசின் செயல்களை கண்டிக்கும் வகையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
எதிர்க்கட்சிகள் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச வாய்ப்பு அளிக்கவில்லை. ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திமுக அரசு மறு விசாரணை செய்வது பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறினார்.
மேலும் கொடநாடு வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சயனிடம் பெற்ற ரகசிய வாக்குமூலத்தில் தனது பெயரையும், அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயர்களையும சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொடநாடு கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஜாமீன்தாரர்களாக இருந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்காக திமுக வழக்கறிஞரான என்.ஆர்.இளங்கோ ஆஜரானதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியின் போது கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போது அரசு வழக்கறிஞர்களாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். கொடநாடு வழக்கில் குற்றவாளிகளும், அரசு வழக்கறிஞர்களும் இணைந்து செயல்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், கொலை, கொள்ளை, போதை மருந்து வழக்குகளில் தொடர்புள்ள அவர்களுக்கு திமுக அரசு ஆதரவு கொடுப்பது ஏன்? என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
அதிமுக கூட்டணி வெளிநடப்பு
அதிமுக உறுப்பினர்களுடன் பாமக, பிஜேபி, கட்சிகளின் உறுப்பினர்களும் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையை இரண்டு நாட்கள் புறகணிப்பு
திமுக அரசு பழிவாங்கும் வகையில் செயல்படுவதாகவும் இதனை கண்டித்து சட்டப்பேரவையை இரண்டு நாட்களுக்கு புறக்கணிக்க உள்ளதாகவும் அதிமுக அறிவித்துள்ளது.
பொய் வழக்கு போடும் திமுக அரசைக் கண்டித்து சட்டப்பேரவையை இன்றும் நாளையும் புறக்கணித்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம்.#AIADMK pic.twitter.com/JBQCYxkcW8
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) August 18, 2021
No comments
Thank you for your comments