Breaking News

கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலி

 ஓசூர்:

கார் விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் கருணாசாகர் (வயது 24).

இந்த நிலையில் நேற்று இரவு கருணாசாகர், தனது நண்பர்கள் 6 பேருடன் ஆடி காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது இன்று அதிகாலை 2 மணியளவில் கோரமங்கலா என்ற இடத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கருணாசாகர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரும் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த விபத்து ஆடு கோடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான 7 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருணாசாகருடன் பயணம் செய்த அவரது நண்பர்கள் 6 பேரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மிகவும் விலை உயர்ந்த ஆடி காரில் கருணாசாகர் அதிவேகமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காரில் பயணம் செய்த 7 பேரும் சீட் பெல்ட் அணியாததால் காரில் ஏர் பேக் வேலை செய்யவில்லை. இதனால் விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

காரில் சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மார்ச் மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனைவி இறந்த நிலையில் தற்போது கார் விபத்தில் தனது மகனையும் இழந்து உள்ளார் எம்.எல்.ஏ பிரகாஷ். இந்நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருணா சாகர் மறைவுக்கு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார்.



முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், 

ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர்  ஒய்.பிரகாஷ் அவர்களின் மகன் கருணாசாகர், பெங்களூரு அருகே நிகழ்ந்த கோரமான சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

கோர விபத்துக்கு தன் அன்பு மகனைப் பறிகொடுத்திருக்கும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை.

அன்பு மகனை இழந்து தவிக்கும் அவருக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments