செப்.1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு - ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் அதிகார பூர்வ அறிவிப்பு...
சென்னை:
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் 15-9-2021 வரை நீட்டிக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே 1-9-2021 முதல் 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று (30-8-2021) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 28-8-2021 அன்று வெளியிட்டுள்ள ஆணையில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை 30-9-2021-வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நலன் கருதி, நோய்த் தொற்றுப் பரவலை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய்ப் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே 1-9-2021 முதல் 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் (School and College Hostels) ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
அதேபோல, பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள் (working men/women hostel) கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான நிலையான வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேற்படி விடுதிகளில் பணியாற்றும் விடுதி காப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
மாணவச் செல்வங்களின் கல்வி மற்றும் உளவியல் நலனுக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து, அனைவரும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும், இதர பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்திட உதவிட வேண்டுமெனவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு, தமிழ்நாடு அரசு இன்றைய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

No comments
Thank you for your comments