Breaking News

வெறிநாய் கடித்ததில் சிறுவன் பலி... 5-க்கும் மேற்பட்டோர் காயம்!

சென்னை, ஆக.22-

பூந்தமல்லி அருகே வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெறி பிடித்த நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் அதனை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


பூந்தமல்லி அடுத்த அகரமேல் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று அந்த வழியாக சென்ற சிறுவர்கள் சிலரை கடித்து குதறியது 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலர் ரேபீஸ் நோய் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசிகளைச் எடுத்துக்கொண்டனர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகன் 7 வயது சிறுவன் மோனிஷையும் அந்த வெறிநாய் கடித்து குதறியது.

வெறிநாய் கடித்து குதறியதில் முகம் உள்ளிட்ட இடங்களில் சிறுவன் படுகாயமடைந்தான். இதையடுத்து அவரது பெற்றோர் சிறுவனுக்கு தடுப்பூசி ஏதும் போடாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு சிறுவனுக்கு திடீரென நாயை போன்று நாக்கில் இருந்து எச்சில் ஊற்றியதாகவும், தண்ணீரை கண்டால் ஓடுவது உள்ளிட்ட சுபாவங்கள் நாயை போல் மாறியதாக கூறப்படுகிறது.

பயந்து போன பெற்றோர் மோனீசை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மோனிஷ் ரேபிஸ் நோய் தாக்கி இன்று பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் சிறுவன் யாருடன் எல்லாம் பழகினார் என கணக்கெடுத்து அவர்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

ஏனென்றால் சிறுவனின் எச்சில் பட்டால் அவர்களுக்கும் ரேபீஸ் நோய் தொற்றும் என்பதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பூந்தமல்லி சுகாதராத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகரமேல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வெறி பிடித்த நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் அதனை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வெறிநாய் கடித்த ஒரு மாதத்திற்கு பின்பு சிறுவன் ரேபிஸ் நோய் தாக்கி இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments