ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரக ஊழியர்கள் வாபஸ்- 249 பேர் இந்தியா வந்தடைந்தனர்...
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இயங்கிய இந்திய தூதரகத்தில் இருந்து 140 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தடைந்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கு யாராவது விரும்பினால் அவர்களுக்கு உடனடி மின்னணு விசா வழங்குவதற்கும் இந்தியா ஏற்பாடு செய்து இருக்கிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன. தூதரக ஊழியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இவர்களில் பலர் நாட்டை விட்டு சென்று விட்ட நிலையில் மற்றவர்கள் தங்களது நாட்டுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்தியாவும் தனது தூதரகத்தை மூடிவிட்டு ஊழியர்களை பத்திரமாக வெளியேற்ற ஏற்பாடு செய்தது. இந்திய தூதர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு இருந்தனர்.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக விமானப்படையை சேர்ந்த சி-17 சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 120 தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் அந்த விமானத்தில் ஏறினார்கள். பின்னர் விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் 120 அதிகாரிகளுடன் இந்திய விமானப்படை விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தரையிறங்கியது. ஏற்கனவே முதல் விமானத்தில் 129 இந்தியர்கள் தாயகம் திரும்பிய நிலையில் மேலும் 120 பேர் வந்துள்ளனர்.
முன்னதாக, இரண்டாவது விமானத்திற்கான இந்திய தூதரக ஊழியர்கள் விமான நிலையத்துக்கு புறப்பட்ட பொழுது தலிபான் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விட்டனர்.
இந்திய தூதர் ருத்ரேந்திர தாண்டன் புதிய தலிபான் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து இந்திய தூதரக ஊழியர்கள் இரண்டாவது குழுவுக்கு விமான நிலையம் செல்ல அனுமதி வழங்க தலிபான் படையினர் முன்வந்தனர்.
தலிபான் படையினர் அறிவித்தபடி திங்கட்கிழமை இரவு இந்தியா திரும்பும் தூதரக ஊழியர்களின் குழு காபூல் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. விமான நிலையத்தில் திங்கட்கிழமை இரவு அவர்கள் தங்கி இருந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்ட இந்திய விமானம் ஆப்கானிஸ்தான் விண்வெளியையும் பாகிஸ்தான் வின்வெளியும் அதிகமாக பயன்படுத்தவில்லை.
ஆப்கானிஸ்தானில் இருந்து நேரே ஈரான் நாட்டிற்கு இந்திய விமானம் பறந்தது. ஈரான் நாட்டில் இருந்து அரபிக் கடலுக்கு மேலே இந்திய விமானம் பறந்து வந்து குஜராத் மாநிலத்தில் தரை இறங்கியது.
இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை அழைத்து வருவதற்காக மீண்டும் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன. தற்போது 420 இந்தியர்கள் அங்கு சிக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் அனைவரும் பத்திரமாக அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 25 தொழிலாளர்கள் காபூலில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். அவர்களும் இந்தியாவுக்கு திரும்ப முயற்சித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் வேலைபார்த்து வந்த நிறுவனம் தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துள்ளது. அதை திருப்பி கொடுக்க மறுப்பதால் அவர்கள் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்தியா இதில் உடனடியாக தலையிட்டு எங்களை மீட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதர் வாபஸ் பெறப்பட்டு விட்டதாக இந்தியா முறைப்படி அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கு யாராவது விரும்பினால் அவர்களுக்கு உடனடி மின்னணு விசா வழங்குவதற்கும் இந்தியா ஏற்பாடு செய்து இருக்கிறது. இது ‘இ-எமர்ஜென்சி எக்ஸ் மிஸ்க் விசா’ என அழைக்கப்படுகிறது.
இந்த விசாவுக்கு விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இந்துக்கள்-சீக்கியர்கள் இந்தியா வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து முக்கிய தலைவர்கள், முன்னாள் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், வெளிநாடுகளுக்கு தப்பி ஓட தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். மேலும் தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என கருதும் பலரும் வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து இருக்கிறார்கள். விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ராணுவம் அவர்களை விமானங்களில் ஏற்றி அனுப்பி வருகிறது. ஆனால் விமான சேவைகள் மிகக்குறைவாக இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்தில் குவிந்து இருப்பதால் அவர்களால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியவில்லை.
எனவே தலிபான்கள் என்ன செய்வார்களோ என்ற பீதியில் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். இதுவரை தலிபான்கள் அமைதி காத்து வருகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அரசு பற்றிய தலிபான்கள் அறிவிப்பு வெளியான பிறகு ஆப்கானிஸ்தான் அத்துடன் எத்தகைய உறவு வைத்துக்கொள்வது என்பதை இந்தியா முடிவு செய்யக் கூடும் அதன்பிறகு இந்திய தூதரகத்தை திறப்பது குறித்த அரசு முடிவு செய்யும் எனத் தெரிகிறது
#WATCH | Indian Air Force C-17 aircraft that took off from Kabul, Afghanistan with Indian officials, lands in Jamnagar, Gujarat. pic.twitter.com/1w3HFYef6b
— ANI (@ANI) August 17, 2021
No comments
Thank you for your comments