Breaking News

ஆப்கானிஸ்தானத்தில் பேச்சுவார்த்தை மூலம் பொது அரசு அமைக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு

நியூயார்க் :

நியூயார்க் நகரில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஐநா தலைமையகத்தில் திங்கட்கிழமை நடந்தது. அந்த கூட்டத்திற்கு பிறகு ஐநா பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ஆப்கானிஸ்தானத்தில் பேச்சுவார்த்தை மூலம் பொது அரசு அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.


ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இருந்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கனி வெளியேறி விட்டார். அதேசமயம் காபூல் நகரில் நுழைந்த தலிபான் படைகள் ஜனாதிபதி மாளிகையை தங்கள் வசப்படுத்திக் கொண்டன.

தலிபான் அமைப்பின் மிலிட்டரி கமிஷன் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையில் இப்பொழுது அமைந்துள்ளது.  இந்தப் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் திங்கட்கிழமை துவங்கியது.  பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வந்து கூட்ட நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்.

அவரை இந்திய பிரதிநிதி திருமூர்த்தி வரவேற்று கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.  கூட்டத்தில் ஒருமித்த கருத்து அடிப்படையில் ஆப்கானிஸ்தானத்தில் அனைவருக்கும் பொதுவான, எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் வழங்குகின்ற அரசை அமைக்க, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது முதலில் பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பேசிய விவரங்கள் அடங்கிய விடியோ பாதுகாப்பு கவுன்சில் சார்பாக வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினார்கள் இந்த ஆலோசனை விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஐ.நா சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ பாதுகாப்புக் கவுன்சிலில் பேசினார்.  ஆப்கானிஸ்தானத்தில் தற்பொழுது உள்ள தரப்பினர் அனைவரும் கட்டுப்பாட்டை அமல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஆப்கானிஸ்தானிலிருந்து மனித உரிமைகள் மீறல் தொடர்பாக அதிர்ச்சிதரும் அறிக்கைகள் வருகின்றன என்று அவர் கூறினார்.

கவுன்சிலில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் வசம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானத்தில் உலகு தழுவிய பயங்கரவாத அபாயம் பிறக்காமல் தடுக்க வேண்டும். அங்கு எல்லோருடைய மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்களை நாம் ஒருபோதும் கைவிட முடியாது; கைவிடக்கூடாது என்று அந்தோனியோ கூறினார்.

ஆப்கானிஸ்தானில்  பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட வேண்டும் அதன் மூலம் மற்ற நாடுகளுக்கு மிரட்டல் ஏற்படக் கூடாது .மற்ற நாடுகளில் பயங்கரவாத குழுக்கள் ஜோக்குகளை ஏவக் கூடாது.

தலிபான்குழுவினரோ அல்லது ஆப்கானிஸ்தானத்தில் உள்ள மற்ற பயங்கரவாத குழுக்களோ ஆப்கானிஸ்தானிலிருந்து கொண்டு மற்ற நாடுகளில் பயங்கரவாதம் நடப்பதற்கு தூண்டக் கூடாது என்று பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆப்கானிஸ்தானத்தில் வன்முறை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் அங்கு புதிய அரசு அமைப்பதற்கு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும் அந்த அரசில் பெண்கள் உள்பட. அனைவருக்கும் இடம் அளிக்க வேண்டும் என்று பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆப்கானிஸ்தான் பிரதிநிதி ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசினார். அவர் உடனடியாக இடைக்கால அரசு ஒன்றை நிறுவ வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். வன்முறை மூலம் ஆப்கானிஸ்தானத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அமைப்புக்களை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் எந்த வகையிலும் அங்கீகரிக்க கூடாது என்று வலியுறுத்தினார்.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யப்பிரதிநிதி பேசும் பொழுது, மிக விரைவாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றியது பெரிதும் ஆச்சரியம் அளிக்கிறது என்று கூறினார் நல்லவேளையாக பொதுமக்கள் ரத்தம் சிந்துவது தடுக்கப்பட்டுள்ளது இனிமேல் நாம் அச்சமும் பீதியும் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை ஆப்கானிஸ்தானத்தில் உடனடியாக வன்முறைச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் எல்லோரும் ஒன்றாக அமைதியாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஒருபோதும் அப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற அனுமதிக்கக் கூடாது இதுதான் இன்று முக்கியமானதாகும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரதிநிதி ஜெங்ஷுவான் கூறினார். கடந்தகால நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில் தலிபான் அமைப்பு இயங்கும் என்று சீனப் பிரதிநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானத்தில் மூவாயிரம் பேரை கொண்ட ஐநா சபை  குழு ஒன்று உள்ளது மேலும் 300 க்கு மேற்பட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஐநா சபை ஊழியர்களாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை ஐநா சபை அலுவலகம் தொடர்ந்து ஆப்கானிஸ்தானத்தில் இயங்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவும் என்று அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments