Breaking News

சுமார் ரூ.2000 கோடி மதிப்பு.. வக்பு வாரிய சொத்துக்கள் முறைகேடாக விற்பனை - உயர்நீதிமன்றம் உச்சிதமான உத்தரவு

சென்னை : 

தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை முறைகேடாக விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முறைகேடாக விற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

மதுரை கட்ராபாளையம் தெருவைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான் என்ற நபர் இந்த வழக்கை தொடுத்து இருந்தார். வக்பு வாரிய பாதுகாப்புக்குழு அறக்கட்டளை அமைப்பின் தலைவரான இவர், வக்பு வாரிய சொத்து விற்பனையில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டி இருந்தார். 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு வாரிய சொத்துக்களை விதிமுறைகளை மீறி விட்டதாகவும், தவறான முறையில் ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்கி தனிநபர்களுக்கு இந்த சொத்துக்கள் விற்கப்பட்டதாகவும், இதற்கு வக்பு வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாகவும் எம்.அஜ்மல்கான் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக சென்னையில் உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், வக்பு வாரிய சொத்து விற்பனை முறைகேடு தொடர்பாக ஏற்கனவே நான் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்து இருந்தேன். அதோடு சிறுபான்மையின நலத்துறை முதன்மை செயலாளர், வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி ஆகியோரிடமும் புகார் அளித்து இருந்தேன். ஆனால் என்னுடைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இந்த முறைகேடு தொடர்பாக உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த முறைகேடு தொடர்பாக வக்பு வாரியத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், இளநிலை உதவியாளர் முகமது ஆலிம் ஓய்வு பெற்ற முதன்மை செயல் அதிகாரி ரசீத் அலி, வக்பு வாரிய கண்காணிப்பாளர் லியாகத் அலி, ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் முகமது அஸ்லம், ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் நூருல்லா, ஆகியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை முறைகேடாக விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Thank you for your comments