தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன்னதாக செப்.13ல் நிறைவு - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
சென்னை, ஆக.17-
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி வரைக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருவாரத்திற்கு முன்னதாகவே நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2021-22ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்தார்.
14ஆம் தேதி வேளாண் நிதிநிலைஅறிக்கையை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரு பட்ஜெட்டுகளும் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதம் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கார சார விவாதங்கள் சட்டசபையில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை குறைப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டசபை கூட்டத்தொடர் ஒருவாரம் முன்னதாக செப்டம்பர் 13ஆம் தேதியே நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவு பெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என, சபாநாயகர் மு.அப்பாவு சட்டசபையில் அறிவித்தார்.
மானிய கோரிக்கை ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை 23 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதற்கு முன்பாக அறிவிக்கப்பட்ட ஒருசில துறைகள் மாற்றம் செய்யப்பட்டு 9 நாட்கள் குறைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, செப்டம்பர் 13ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டசபை முன்கூட்டியே நிறைவடைவதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பல்வேறு துறைகள் மீதான விவாத நாட்கள் இதற்கேற்ப மாற்றியமைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த முழு விவரம் விரைவில் வெளியாகும்.
No comments
Thank you for your comments