இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை:
தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரேசனில் இலவச அரிசி, இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ. 5 கோடி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 110-வது விதியின்கீழ் அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர்.
இலங்கை தமிழர்கள் வசிப்பதற்காக தமிழ்நாட்டில் பல இடங்களில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீடுகள், சாலைகள் சேதம் அடைந்திருப்பதாக ஏற்கனவே பல முறை புகார்கள் வந்தன.
முகாமில் உள்ள குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் திண்டாடினார்கள். எனவே இலங்கை தமிழர்களின் முகாம்களை மேம்படுத்தவும், அவர்களுக்கு நல உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 110-வது விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். விவரம் வருமாறு:
இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்படும்.
ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ. 5 கோடி வழங்கப்படும்.
கல்விக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாம்களில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும்.
இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், முகாம்களை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் ரூ. 6 கோடி என ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
No comments
Thank you for your comments