நெத்திலி மீன்கள் விலைபோகதால் ஏமாற்றத்தில் மீனவர்கள்...!
குளச்சல்:
குளச்சலில் வள்ளம் மீனவர்களின் வலையில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கியதால் அவற்றை கருவாடாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000க்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன.
இங்குள்ள விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்து கரை திரும்புவது வழக்கம். அவ்வாறு வரும் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்களாகிய சுறா, இறால், கேரை, கணவாய், கிளி மீன்கள் கிடைக்கும்.
தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வள்ளம், கட்டுமரங்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்று வருகின்றன.
நேற்று மீன்பிடிக்க சென்ற வள்ளம், கட்டுமர மீனவர்களின் வலைகளில் குவியல் குவியலாக நெத்திலி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் துறைமுக ஏலக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
ஒரு கூடை நெத்திலி மீன்கள் ரூ.800-க்கு விலை போனது. இது கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கூடை ரூ.2500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
ஆனால் தற்போது வரத்து அதிகமாக இருந்ததால் விற்பனையாகாத ஏராளமான நெத்திலி மீன்களை கருவாடாக மாற்ற கொண்டு செல்லப்பட்டது. அதன்படி மீனவர்கள் கடற்கரை பகுதி, குளச்சல் பாலம், துறைமுக வளாகம் என அனைத்து இடங்களிலும் நெத்திலி மீன்களை உலர வைத்து கருவாடாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயார் செய்யப்படும் கருவாடுகளுக்கு வெளியூர்களில் அதிக மவுசு உள்ளது. இதனால், சென்னை, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

No comments
Thank you for your comments