நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வணிகர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்
வேலூர்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் வேலூர் கோட்ட வணிகர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் இன்று (01.07.2021) ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.து.மு.கதிர் ஆனந்த், திரு.சி.என்.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதன்மை செயலர் மற்றும் வணிகவரி ஆணையர் திரு.எம்.ஏ.சித்திக்,இ.ஆ.ப., அவர்கள் விளக்க உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் (அணைக்கட்டு) திரு.ஏ.பி.நந்தகுமார், (வேலூர்) திரு.ப.கார்த்திகேயன், (ஜோலார்பேட்டை) திரு.க.தேவராஜ், (திருப்பத்தூர்) திரு.ஆ.நல்லதம்பி, (ஆற்காடு) திரு.ஜெ.எல்.ஈஸ்வரப்பன், (ஆம்பூர்) திரு.செ.வில்வநாதன், (குடியாத்தம்) திருமதி.அமலு விஜயன்(கே.வி.குப்பம்) திரு.எம்.ஜெகன்மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
வேலூர் மாவட்டம் பெருமை வாய்ந்த மாவட்டம். சில மாவட்டங்களை போல் இங்கு சாதி, மத சண்டைகள் எதுவும் கிடையாது. அமைதியான மாவட்டம். இங்குள்ள பொதுமக்கள் விவசாயம், தோல் தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். மற்றவர்களுக்கு வேலை கிடையாது. வேலூர் மாவட்டம் வறண்ட நீர் வளம் இல்லாத மாவட்டம். இந்த பகுதியை வளப்படுத்த பல காரியங்களை புதிதாக வந்திருக்க கூடிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்ய வேண்டும். என்னுடைய காலத்திலேயே பாலாறு-தென்பெண்ணை ஆறுகளை இணைக்க வேண்டும்.
மேலும், பாலாற்றில் பல்வேறு தடுப்பணைகள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டுவதால் அப்பகுதியில் நீர் ஊறி விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் அமையும். இதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாலாற்றில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகளை துணிந்து அகற்ற வேண்டும். வேலூர் மேல்மொணவூரில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிற வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்கள் இந்த வணிக வளாகத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இந்த துறையை பொருத்த வரையில் 10 நபர்களில் குறைந்தது 7 நபர்கள் வியாபாரிகளாக மண்டித்தெருவில் தான் இருப்பார்கள். வணிகர்கள் தமது குறைகளை வணிகவரி வாரியத்தின் மூலமாக கொடுக்க வேண்டும்.
மேலும், மது விற்பனை மற்றும் வணிகவரித் துறை மூலம் அரசுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது. வணிக வரி மூலம் மட்டும் சுமார் ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் தொழிற்சாலைகளுக்கும், அணைகள் கட்டுவதற்கும், போக்குவரத்திற்கும் பயன்படுத்தபடுவதால் வணிகர்கள் சரியான முறையில் வரியினை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து, அரசுக்கு மிகப்பெரிய நீர் ஊற்று மற்றும் நிதி ஊற்றாக வணிகவரி துறை உள்ளது. அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து முறையாக நிதியை பெற வேண்டும். மத்திய அரசு நம்மிடமிருந்து பெறும் வரியில் 50 சதவீதம் கூட தருவதில்லை. வணிகர்கள் கட்டும் வரியைக் கொண்டு தான் நம்மால் பல திட்டங்களை செயல்படுத்த முடியும். வணிகர்கள் ஒழுங்காக வரி செலுத்த வேண்டும் அப்போதுதான் நல்லாட்சியை தர முடியும்.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக வருகிற 5 மற்றும் 6-ந் தேதி டெல்லி சென்று பேச்சு நடத்த உள்ளேன். கர்நாடக அரசு மார்க்கண்டேய நதியின் குறுக்கே புதிய அணை கட்டியதால் தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தில் சாத்தியமில்லை என்று கூறுவது தவறு. தென்பெண்ணை ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் செல்லக்கூடிய உபரி நீரை மட்டும் தான் கேட்கிறோம். இதனால் தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் சாத்தியப்படும். பாலாற்றில் இந்த ஆண்டு 7 இடங்களில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என்றார். வணிகவரித்துறை அலுவலர்கள் வணிகர்களிடம் மென்மையான போக்கு கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு வணிகவரித் துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்களை பற்றி கூறுகையில், நெடுநாள் அரசியல் பணியில் ஈடுபட்டு 4 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி மக்கள் மத்தியில் நீச்சல் அடித்து கொண்டிருப்பவர், அன்பானவர், பொதுமக்களின் பிரச்சனைகளை விரல் நுனியில் வைத்து தன் பாணியில் சிறப்பாக பணியாற்றுபவர். முதன்மை செயலர் மற்றும் வணிகவரி ஆணையர் அவர்களை பற்றி கூறுகையில் நிதி துறையிலும், கணக்கு வழக்குகளிலும் சிறப்பான அனுபவம் பெற்றவர் என மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் கூறினார்.
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பதவி ஏற்று 55 நாட்களில் தமிழ்நாட்டில் 36 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு இருந்ததால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை அனுப்பி தனிகவனம் செலுத்தியதால் கொரோனா பெருந்தொற்று தற்போது 4 ஆயிரமாக குறைந்துள்ளது. மேலும் கடந்த ஆட்சியில் 10 ஆண்டு காலமாக வணிகர்களிடம் எந்த ஒரு குறைகேட்பு கூட்டமும் நடத்தப்படவில்லை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கோட்டம் வாரியாக வணிகர்களின் கருத்துக்களை கேட்க இந்த வேலூர் கோட்டத்தில் 4வது கூட்டமாக தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி வணிகர்கள் தங்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர். வணிக பெருமக்கள் தெரிவிக்கும் குறைகளை ஆணையர் மற்றும் அமைச்சர்கள் குறிப்பெடுத்து சமாதான திட்டம், மதிப்பு கூட்டு வரி, உள்ளிட்ட வரி வரவு ஆகிய இனங்களில் தனிகவனம் செலுத்த அறிவுரை வழங்கி இந்த பெருந்தொற்று காலத்திலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றார். நலவாரியத்தில் சேர சிறு வணிகர்களுக்கு கட்டணம் தேவையில்லை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் எளிமையாக செயல்பட்டு வருகிறார். எல்லாத் தரப்பு மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் வணிகர்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறோம். நியாமான தொழில், உற்பத்தி செய்யவும் அரசு உறுதுணையாக இருக்கும். தமிழகத்தை கடந்த அரசு 5 லட்சம் கோடி கடனில் விட்டுச் சென்றுள்ளது. வணிகர்கள் முறையாக வரி செலுத்த வேண்டும். உங்களுடைய குறைகள் அனைத்தும் நலவாரியம் மூலம் களையப்படும். சிறு வணிகர்கள் நலவாரியத்தில் சேருவதற்கு ரூ. 500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்கள் கட்டணமின்றி சிறு வணிகர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம்.
இதன் மூலம் பள்ளி, கல்லூரி, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் செய்யப்படும். வணிகர்களுக்கு விடியலாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இருப்பார் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது.
வணிகர்கள் தற்போது 40 இலட்சம் வரை வியாபாரம் செய்யும் வணிகர்கள் (ஜி.எஸ்.டி) பதிவு சான்று பெற தேவையில்லை. இவ்வரம்பினை ரூபாய் 1 கோடியாக உயர்த்த வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இவ்வரம்பினை குறைந்தது ரூபாய் 50 இலட்சம் வரை உயர்த்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மூலம் ஜி.எஸ்.சி கவுன்சிலுக்கு தெரிவிக்கப்படும். மேலும், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ஆகிய வணிகவரி அலுவலகங்களுக்கு அரசு சொந்த கட்டிடம் தேவை. இதனில் துறை அமைச்சர் தனிகவனம் செலுத்தி பெற்று தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதை செயல்படுத்துவதில் டாக்டர்.கலைஞர் அவர்களின் மறு உருவமாக மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார். திமுக ஆட்சிகாலத்தில் எப்போதுமே வணிகர்களுக்கு விடிவு காலம் என தெரிவித்துள்ளார்.
வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த வணிகர்கள் பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர்கள் (வணிகவரி) திருமதி.இரா.சுமதி, திருமதி.பொன்மாலா, உதவி ஆணையர் திரு.சத்திய குமார், உதவி ஆணையர் திரு.ஹர்சத், மாநில வரி அலுவலர்கள் திருமதி.மைதிலி, திரு.ராகுலன், திரு.மாதவன் மற்றும் வணிக வரி துறை அலுவலர்கள் வேலூர் கோட்டத்திற்கு உட்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர். ✍






No comments
Thank you for your comments