ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டி ...! - ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு...
வேலூர்:
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் இவ்வாண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இணையதளத்தின் மூலம் ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர் நேதாஜி விளையாட்டரங்கினுள் ஒலிம்பிக் செல்ஃபி பாயிண்ட் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் இவ்வாண்டு 23 ஜூலை முதல் 08 ஆகஸ்ட் வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
1. மேசைப்பந்து விளையாட்டில் திரு ஜி.சத்யன் மற்றும் திரு அ. சரத் கமல் ஆகியோரும், வாள்சண்டையில் செல்வி சி.ஏ,பவானிதேவியும், பாய்மரப் படகோட்டுதலில் திரு கே.சி.கணபதி, திரு வருண் அ.தக்கர் மற்றும் செல்வி நேத்ரா குமணன் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ளனர்.
2. இதுகுறித்து பல்வேறு நிகழ்வுகள் மூலம் பொதுமக்களிடையே பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கொரோனா என்னும் பெருந்தொற்று நோய்ப்பரவலின் தாக்கம் இருக்கும் இந்த சமயத்திலும் மிக உயர்ந்த விளையாட்டான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது தமிழக விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் மாவட்டத்தில் விளையாட்டரங்கத்தின் முன்போ அல்லது பொதுமக்கள் கூடும் முக்கியமான இடத்திலோ சாலை ஓரமாக 22ம் தேதி ஜூலை வரையில் ஒலிம்பிக் செல்ஃபி பாயிண்ட் (Olympic Selfie Point) ஏற்படுத்தி மக்களுக்கு ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
3. ஆகவே, அரசு அறிவித்துள்ள கோவிட்-19 பொது சுகாதார விதிகளைப் பின்பற்றி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், மாணவரல்லாதோர், பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் நேதாஜி விளையாட்டரங்கினுள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒலிம்பிக் செல்ஃபி பாயிண்ட் (Olympic Selfie Point)-னை 22ந் தேதி ஜூலை வரையில் அலுவலக நேரங்களில் செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனை இணையதளத்தில் பதிவிட்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது தமிழக விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டியில் பங்கேற்கும் முறை -
4. டோக்கியோவினை நோக்கி சாலை (ROAD TO TOKYO 2020) எனும் தலைப்பில் அனைத்து வயதினருக்குமான ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டிக்கு https://fitindia.gov.in/ என்னும் இணையதளத்தில் ROAD TO TOKYO 2020 Quiz என்னும் இணைப்பில் கலந்துகொள்ளலாம்.
இந்த இணைப்பில் 120 வினாடிகளுக்குள் பதிலளிக்கும் வகையில் ஒலிம்பிக் குறித்த வரலாறு, ஒலிம்பிக் விளையாட்டில் அடங்கியுள்ள விளையாட்டுப் பிரிவுகள், வீரர்களின் முந்தைய மற்றும் தற்போதைய சாதனைகள், உலக அளவில் படைக்கப்பட்ட சாதனைகள் ஆகியவற்றைக் குறித்த 10 கேள்விகள் இருக்கும்.
5. ஒரு நபர் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு முறை மட்டுமே பங்கேற்க இயலும்.
6. ஒருவேளை பங்கேற்பாளர்கள் சமமான மதிப்பெண்கள் பெறும் பட்சத்தில், குறைந்த வினாடிகளில் பதிலளித்தவர் மட்டுமே வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்.
7. வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய அணியின் டி-ஷர்ட் பரிசாக வழங்கப்படும்.
இத்தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.

No comments
Thank you for your comments