பத்திரப்பதிவு தொடர்பான புகார்களுக்கு உடனடி தீர்வு- வாட்ஸ் ஆப்பில் புகார்களை அளிக்கலாம்... அமைச்சர்
வேலூர்:
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பதிவுத்துறையின் வேலூர் மற்றும் கடலூர் மண்டல பணி சீராய்வு கூட்டம் இன்று (01.07.2021) பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அறங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. P. மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் திருமதி.பா.ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., பதிவுத்துறைதலைவர் திரு. ம.ப.சிவன்அருள், இ.ஆ.ப., கூடுதல் பதிவுத்துறைத்தலைவர்கள், துணை பதிவுத்துறைத் தலைவர்கள், உதவிபதிவுத்துறைத்தலைவர், மாவட்டப்பதிவாளர்கள் (நிருவாகம்), மாவட்டப்பதிவாளர்கள் (தணிக்கை), வேலூர் மற்றும் கடலூர் மண்டல சார்பதிவாளர்கள், வேலூர் மற்றும் கடலூர் மண்டலத்திற்குட்பட்ட தனித்துணை ஆட்சியர் (முத்திரை) கலந்து கொண்டனர்.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் அனைத்து பதிவு அலுவலர்களும் பொதுமக்களிடம் கனிவாக பேசி, அவர்களின் சந்தேகங்களை போக்கி அவர்களுக்கு மனநிறைவான அனுபவத்தினை ஏற்படுத்தி தர அறிவுறுத்தினார்.
மேலும், பதிவு அலுவலர்கள் அனைவரும் எவ்வித புகாருக்கும் இடமின்றி நடந்து கொள்ள வேண்டும் எனவும், வெளிப்படைத் தன்மையை பேணவேண்டும் எனவும் மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
பதிவுத்துறையில் பத்திரப்பதிவு தொடர்பான புகார்கள் பெறும் கட்டுப்பாட்டு அறை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் மூன்று அலுவலர்களுடன் 16.06.2021 அன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பதிவு அலுவலர்கள் மீதான மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான புகார்களை 9498452110, 9498452120,. 9498452130 என்ற அலைபேசி வழியாக அலுவலக நேரத்தில் தெரிவிக்கலாம் எனவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார்களை அளிக்கலாம் எனவும், அளிக்கப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாண்புமிகு அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 17.06.2021 முதல் 30.06.2021 வரை தொலைபேசி வழி பெறப்பட்ட புகார்கள் 717 , வாட்ஸ் ஆப் வழியாக பெறப்பட்ட புகார்கள் 703 இனங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் 88 புகார்கள் பெறப்பட்டு இதில் 801 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள இனங்கள் உரிய மாவட்டப்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டு புகார்களின் தன்மைக்கு ஏற்ப விரைந்து நடவடிக்கை எடுக்கவும், தீர்வு காணவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு அமைச்சர் அவர்களால் மண்டலத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள், மாவட்டப்பதிவாளர் அலுவலகங்கள், துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் ஆகியவற்றில் பதிவுப்பணி தொடர்பான புகார்களை களைய ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தொலைபேசி எண் விவரங்கள் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
அரசின் வருவாயை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம் செலுத்த அனைத்து அலுவலர்களையும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார். நிலுவை ஆவணங்களை சரியான இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான யுக்திகளை கையாண்டு வருவாயை பெருக்க அரசு செயலாளரால் அறிவுறுத்தப்பட்டது.
ஆவணங்கள் பதிவு நாளன்றே திரும்ப வழங்கியுள்ளனரா என்பது குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களால் சீராய்வு செய்யப்பட்டது. வேலூர் மண்டலத்தை பொறுத்து 96% மற்றும் கடலூர் மண்டலத்தை பொறுத்து சராசரியாக 92% ஆவணங்கள் பதிவான அன்றே திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இந்த சதவீதம் குறைவாக உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் சுட்டிக்காட்டப்பட்டு பதிவு நாளன்றே ஆவணங்களை திரும்ப வழங்குவதில் தாமதிக்கும் அலுவலகங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மாண்புமிகு அமைச்சர் அவர்களால் நிலுவை ஆவணங்கள் குறித்து சீராய்வு செய்யப்பட்டது. அதிகளவில் நிலுவையிலுள்ள அலுவலகங்களை மாதந்தோறும் துணைப்பதிவுத்துறை தலைவர் மற்றும் மாவட்டப்பதிவாளர்கள் திடீராய்வு மற்றும் இதர ஆய்வுகளின் போது கண்டறிந்து நிலுவையினை குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.
அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்து பராமரிக்க வேண்டுமெனவும், கோவிட் 19 தொற்று ஏற்படா வண்ணம் கை கழுவும் வசதி ஏற்படுத்தி தருதல், தனி மனித இடைவெளியை உறுதி செய்தல், கிருமி நாசினியை உபயோகப்படுத்துதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் எனவும், ஆவணப்பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு மனநிறைவான அனுபவத்தை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் அரசு செயலாளரால் அறிவுறுத்தப்பட்டது.
பின் பதிவுத்துறைத்தலைவர் படிக்க வேலூர், கடலூர் மண்டல அலுவலர்கள் அனைவராலும் கீழ் கண்ட உறுதி மொழி எடுக்கப்பட்டது.
பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றும் அலுவலராகிய நான் விதிமுறைகளுக்குட்பட்டு யாருடைய தலையீடும் இன்றி நேர்மையுடன் பதிவுப்பணிகளை மேற்கொள்வேன் என்றும் ஒருதலைபட்சமாக ஒருபோதும் நடந்து கொள்ளமாட்டேன் என்றும் அரசுக்கு வருவாய் ஈட்டிதரும் எனது பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தவறுகளுக்கு இடம் தராமல் மக்கள் பணியாற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
அனைத்து அலுவலர்களும் சீரிய முறையில் பணியாற்றவும், வருவாய் இலக்கினை அடைந்திடவும், மீள மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர். ✍

No comments
Thank you for your comments