Breaking News

பலத்த மழையால் அறுந்து விழுந்த மின்கம்பி... முதியவர் பலி...!

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக மிதித்ததால் மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்.



கன்னியாகுமரி அருகே பழத்தோட்டம் பாலசுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் வேலையா (வயது 65), தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.

இந்தநிலையில் நேற்று காலை வேலைய்யா டீ குடிப்பதற்காக மாதவபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மழையினால் மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் வேலையா மின்கம்பி மீது மிதித்து விட்டார். இதனால் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீஸார் வேலையா உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments

Thank you for your comments