Breaking News

உட்கார்ந்த படியே மனுவை வாங்கிய மாவட்ட ஆட்சியர்... ஆத்திரமடைந்த அதிமுகவினர்-அலுவலகத்தில் பரபரப்பு

கோவை:

கோவை மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் மனு அளிக்க வந்த  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தனது நாற்காலியில் உட்கார்ந்து மனு வாங்கியதற்கு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ-கள் இன்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் கலெக்டர் அறைக்கு மனு அளிக்க சென்றனர். அப்போது மாவட்ட கலெக்டர் சமீரன் நாற்காலியில் அமர்ந்து கொண்டே மனுவை பெற்றார். இதனால் ஆத்திரம் அடைந்த எம்எல்ஏக்கள், எம்.எல்.ஏக்கள்  வந்தால் எழுந்து நின்று மனுக்களை வாங்குங்கள் எனவும், இது என்ன புது பழக்கம் என கேள்விகளை எழுப்பினர்.

பின்பு கலெக்டர் சமீரன் எழுந்து நின்று மனுக்களை பெற்றார்.தொடர்ந்து நிலைமையை சமாளித்த கலெக்டர் சமீரன் எம்எல்ஏக்கள் அனைவரையும் அமர சொன்னார்.

அந்த மனுவில் கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மற்றும் மத்திய மாநில அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டபணிகளை ரத்து செய்யகூடாது, தொகுதிகளில் நடைபெறும் அரசு பணி துவக்க நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்த நிகழ்வு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments