Breaking News

பாஜகவினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..!

கரூர்:

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை கொண்டாடுவதற்காக, கரூர் பேருந்து நிலையம் அருகே கூடி அனுமதியின்றி பட்டாசு வெடித்தவர்களை கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், கைது முயற்சியின் போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  ஆட்சியர் உத்தரவிட்டும், காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் இருந்தும், பாஜகவினர் கடும் எதிர்ப்பால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.


தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன், கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து,  ஓரிரு மாதங்கள் கழித்து பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். 

பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்தெடுக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். தி.மு.க கூட்டணியில் இருந்தபோதும் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பா.ஜ.க., 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது.

இந்நிலையில்  மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான 43 புதிய மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றிருந்தது. 7ம் தேதி மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். 

இதனையடுத்து தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. தமிழக பா.ஜ.க.வின் துணைத் தலைவராக உள்ள அண்ணாமலை அடுத்த பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதன்படி  தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். 

கரூர் மாவட்டத்தை சார்ந்த அண்ணாமலை, பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக கரூர் பேருந்து நிலையம் அருகில் அக்கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாஜகவினர் இரு சக்கர வாகன பேரணி செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதனிடையே, அவ்வழியாக காரில் வந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அனுமதியின்றி பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்க்கிறீர்களா என போலீசாரை எச்சரித்ததோடு, இடையூறு ஏற்படுத்துபவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுச் சென்றார்.

இதையடுத்து, அனுமதி இன்றி பட்டாசு வெடித்தது, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்காக பாஜகவினரை கைது செய்வதாக கூறிய போலீசார், காவல் வாகனத்தில் ஏறும்படி அவர்களை அறிவுறுத்தினர். ஆனால் அவர்களோ காவல்துறையினரை வசைபாடினர். பட்டாசு வெடித்தால் வழக்கு போடுங்கள், அதென்ன கைது செய்வது என எதிர்க்கேள்வி எழுப்பினர்.

ஆட்சியர் உத்தரவை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதனை அடுத்து அங்கிருந்த பாஜகவினரை போலீசார் சுற்றி வளைத்து காவல் வாகனத்தை நோக்கி நகர்த்தினர்.

ஆனால், பாஜகவினர் கைதாக மறுத்ததோடு, காவல் வாகனத்தில் ஏற உடன்படவில்லை. ஒரு சிலரை மட்டும் போலீசார் வாகனத்தில் ஏற்றிய நிலையில், பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் சிவசாமியை போலீசார் வலுக்கட்டாயமாக தள்ளிக் கொண்டு போய் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களை கைது செய்தால், மாவட்ட முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், மாநிலம் முழுவதும் பிரச்சினையை கிளப்புவோம் என பாஜகவினர் எச்சரித்தனர்.

பாஜகவினர் எதிர்ப்பு, எச்சரிக்கையைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்யாமல் விட்டு விட்டனர். பின்னர் பாஜகவினர் அனைவரும் கலைந்து சென்றனர். இதேபோல போலீசாரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாலும், பின்னர் பாஜகவினர்-போலீசார் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளு காரணமாகவும் கரூர் பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் சிவசாமி உள்ளிட்ட 45 பேர் மீது, அனுமதியின்றி கூடுதல், அனுமதியின்றி பட்டாசு வெடித்தல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


No comments

Thank you for your comments