Breaking News

ஜூலை 12ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூலை 12ம் தேதி திங்கட் கிழமை தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.



இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9-7-2021) அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்,  பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும்,  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும், அண்மையில்  ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து, இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது எனக் கோரி  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம் எழுதினார்.

இதற்கு பதில் கடிதம் எழுதும் போது இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,  கர்நாடக முதலமைச்சர் அவர்களுக்குப் பதில் கடிதம் எழுதியுள்ளார்கள்.

இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 12-7-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 10-30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறு, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments