Breaking News

ஆபரேஷன் AAA..... ஊழல் சதுரங்க ஆட்டம் .. மும்முரமாக காய் நகர்த்தும் அதிகாரிகள்..

சென்னை: 

தமிழ்நாடு அரசு விரைவில் "ஆபரேஷன் AAA" அஸ்திரத்தை கையில் எடுக்க போவதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பட்டியல் ஒன்றை தயாரிக்கும் பணியிலும் அரசு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. 

தமிழ்நாடு திமுக அரசு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாக கடந்த சில நாட்களாகவே பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சில மாஜி அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீதான விசாரணைகள் தொடங்கிவிட்டது.

சென்னை, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடுகள் குறித்து ஏற்கனவே விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் இன்னும் 2 வாரத்தில் முக்கியமான நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிகின்றன.  

ஆபரேஷன் AAA என்ற பெயரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதாவது ஆகஸ்ட் ஆக்சன் ஆரம்பம் என்ற பெயரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளனவாம்.... ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் பல்வேறு மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீதான விசாரணைக்கு உத்தரவிடவும் முடிவு செய்துள்ளனர். இதில் சில கைதுகளும் அரங்கேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதன்படி முன்னாள் அமைச்சர்கள் செய்த முறைகேடுகள், ஊழல்கள் குறித்த பட்டியல் ஒன்று ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.  இந்த பட்டியலில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ள, நீதிமன்றத்தில் விசாரிக்க முகாந்திரம் உள்ள குற்றங்களையும், முறைகேடுகளையும் மட்டும் தனியாக பிரிக்கும் நடவடிக்கைகள் தற்போது செய்யப்பட்டு வருகிறதாம். வலுவாக வழக்குகளை போட வேண்டும் என்பதால் சில தாமதங்கள் இதில் ஏற்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி கந்தசாமி ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினை இது தொடர்பாக சந்தித்து முதல் பட்டியலை கொடுத்துவிட்டார். இந்நிலையில் திருத்தப்பட்ட பட்டியலையும் இன்னும் 2 வாரங்களில் அரசு தரப்பு தயார் செய்யும் என்று கூறப்படுகிறது. 

அதன்படி கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், ஒரே நிறுவனத்திற்கு கூடுதல் விலைக்கு கொடுக்கப்பட்ட டெண்டர்கள், மாஜிக்களின் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்ட டெண்டர்கள் ஆகியவை மீது முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

ஆகஸ்ட் மாதம் தொடங்க இன்னும் இரண்டு வாரமே உள்ளதால் அதிகாரிகள் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது. விஜிலன்ஸ் அலுவலகமே இதனால் பரபரப்பில் உள்ளதாம். சென்னையில் 2 மாஜி அமைச்சர்கள் செய்த முதலீடுகள் குறித்துதான் முதலில் விசாரணை தொடங்கும், அதன்பின் மேற்கு மாவட்டங்களில் இரண்டாம் கட்ட விசாரணை நடக்கும் என்கிறார்கள். 

இதனால் ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டில் நிறைய கைதுகள் அரங்கேற்றப்படலாம். இந்த புகார்களை மட்டும் விசாரிக்க தனியாக நீதிமன்றம் அமைக்கும் முடிவில் அரசு இருப்பதாக கூறப்படுகிறது. இதை திமுக தனது தேர்தல் வாக்குறுதியிலேயே குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த தனி நீதிமன்றம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்ப்பு கிளம்பி உள்ளது.  இனி  ஊழல் சதுரங்க ஆட்டத்திற்கு பஞ்சம் இருக்காது... 

No comments

Thank you for your comments