முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுத்த புதிய திட்டம்..! - போட்டுடைத்த அமைச்சர் சேகர்பாபு
சென்னை:
நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஆணையர் குமரகுருபரன், திருக்கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் திருச்செந்தூர் முருகன் கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் ஈடு பட்டனர். HCL நிறுவன வல்லுநர்கள் கோவிலை புதுப்பிப்பது தொடர்பான திட்டத்தை விளக்கினார்கள்.
இந்த கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்க்கிங் வசதி அமைக்க திட்டமிட பட்டு உள்ளது.கோவிலுக்கு உள்ள அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது .
திருச்செந்தூர் கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்த வேண்டும். ஆனால் கடந்த மாதத்துடன் குடமுழுக்கு தேதி நிறைவடைந்து உள்ளது. எனவே அது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
கோவில் நிலங்களை மீட்பதில் இந்து சமய அறநிலையத்துறை மந்தமாக செயல்படுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று விரைவாக செயல்படுவோம்.
ஆட்சிக்கு வந்து 65 நாட்களில் சிறந்த 10 முதலமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அதுவே திமுக நல்ல ஆட்சியின் சாட்சியாக உள்ளது.
தி.மு.க ஆட்சியில் ரூ.560 கோடிக்கும் மேற்பட்ட 110 ஏக்கர் கோவில் நிலங்கள் உள்ளிட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் தற்போது மீட்கப்பட்டு உள்ளது.
கோவில்களில் நன்கொடையாக வரும் தங்க நகைகளை மும்பையில் உள்ள தங்க உருக்கு ஆலையில் கொடுத்து உருக்கி, அதனை பிக்சர்டு டெபாசிட் முறையில் அந்த அந்த கோவில்களின் பெயரில் இருப்பு வைத்தால் ஆண்டுதோறும் வருமானம் கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார். இதனை செயல்படுத்த தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆடி மாதம் திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. திருவிழாக்கள் முக்கியமா? மனித உயிர்கள் முக்கியமா? என்பதை பார்க்க வேண்டும். திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்குவது குறித்து ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.


No comments
Thank you for your comments