Breaking News

தி.மு.க.வில் இணைந்த 6 மாவட்ட அதிமுகவினர்.... மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து...

சென்னை:  

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் 73 பேர், இன்று மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜன் ஏற்பாட்டில் தி.மு.க.வில் இணைந்தனர்.


தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பல மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க.வினர் பலர் தி.மு.க. பக்கம் வந்த வண்ணம் உள்ளனர்.  முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன் உள்பட பலர் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

வாரம்தோறும் பல மாவட்டங்களில் இருந்து மாற்றுக்கட்சி நிர்வாகிகளும் தி.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இன்று கன்னியாகுமரி, தஞ்சாவூர், ராமநாதபுரம், நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் ஏராளமானோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினார்.

2001-2006 அ.தி.மு.க. ஆட்சியின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வ.து.நடராஜன் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் அவரது மகனும் அ.ம.மு.க. மாவட்ட செயலாளருமான ஆனந்தனும் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் 73 பேர், இன்று மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜன் ஏற்பாட்டில் தி.மு.க.வில் சேர்ந்தனர்.

இதில் நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் முக்கியமானவர் ஆவார். தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஆட்சி காலத்தில் அ.தி.மு.க.வுக்கு மாறினார். இப்போது மீண்டும் தி.மு.க.வுக்கு வந்துள்ளார்.  இவருடன் இன்று தளவாய் சுந்தரத்தின் உதவியாளராக செயல்பட்ட கிருஷ்ணகுமார், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நாஞ்சில் டோமினிக், மகளிர் அணி துணைச் செயலாளர் லதா ராமச்சந்திரன் உள்பட 73 பேர் தி.மு.க.வில் சேர்ந்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, ராஜ கண்ணப்பன், முத்துச்சாமி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments