சோகத்தில் மூழ்கிய கிராமம்...!
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த சண்முகாபுரம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆலங்குளம் அடுத்த சண்முகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் இஷாந்த் (வயது 5). தர்மராஜ் மகன் புவன் (வயது 4). இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்களது உறவினர் பூபாலன் மகள் சண்முகப்பிரியா (வயது.5).
கிராமத்தில் அம்மன் கோவில் உள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவது வழக்கம். கோவிலில் இருந்து சற்று தூரத்தில் குளம் உள்ளது. இதில் தண்ணீர் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை கோவிலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் புவன், இஷாந்த், சண்முகப்பிரியா ஆகியோர் பெற்றோருக்கு தெரியாமல் குளத்திற்கு போய் உள்ளனர்.
விளையாடச் சென்ற மகன் நீண்ட நேரமாக வீட்டிற்கு வரவில்லை என்பதால் இஷாந்த் தாய் சுகன்யா மகனை தேடி கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு மகனையும் உடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளையும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா தெரிந்தவர்கள் வீட்டில் தேடியுள்ளார். கடைசியாக குளத்திற்கு சென்று தேடியபோது தன் மகன் உள்பட ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.
இதை கண்டு அதிர்ச்சியில் உறைந்த சுகன்யா அழுது புலம்பினார். அவரது அழுகுரல் கேட்டு அங்கு கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
பின்னர், குளத்தில் மூழ்கிய குழந்தைகளை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர்கள் 3 குழந்தைகளும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோவிலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் குளத்திற்கு எப்படி சென்றது என்று தெரியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னி வளவன், உதவி ஆய்வாளர் பாரத் லிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள். இறந்த குழந்தைகள் பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சண்முகாபுரம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் இறந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.




No comments
Thank you for your comments