Breaking News

மோர்தானா அணை கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

வேலூர் :

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோர்தானா அணை இடதுபுற கால்வாய்கள் லத்தேரி, அன்னங்குடி ஏரி கால்வாய், காலாப்பட்டு , மேல்மயில், காங்குப்பம் கிராமங்கள் வழியாக செல்லும் இடதுபுற கால்வாயில் உள்ள முட்புதர்களை அகற்றி கால்வாயின் இரண்டு கரைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள்  இன்று  (08.06.2021) ஆய்வு செய்தார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோர்தானா அணையிலிருந்து பாசனத்திற்காக இடது மற்றும் வலது கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டு வலதுபுற கால்வாய்கள் மூலம் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வலது மற்றும் இடது கால்வாய்கள் மூலம்  19 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இடதுபுற கால்வாய் செல்லும் வழியில் காங்குப்பம், மேல்மயில் , காலாப்பட்டு, லத்தேரி ஆகிய பகுதிகளில் கால்வாயில் முட்புதற்கள் மற்றும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்து இடதுபுற கால்வாயில் தண்ணீர் கடைமடை வரைக்கும் தங்குதடையின்றி செல்ல பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். 

லத்தேரி வழியாக அன்னங்குடி ஏரிக்கு செல்லும் கால்வாயில் வியாபாரிகள் அதிக அளவில் குப்பைகளை கொண்டு சென்று கால்வாயில் கொட்டி நீர் வழி தடத்தை மூடும் சட்ட விரோத செயலில் ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைத்தும் கால்வாயில் கொட்டிய குப்பைகளை சம்பந்தப்பட்ட வியாபாரிகளே அகற்றுவதற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, காங்குப்பம், மேல்மயில், காலாப்பட்டு ஆகிய கிராமங்களில் கால்வாய் ஓரம் உள்ள விவசாயிகள் சட்டவிரோதமாக கால்வாயின் கரைகளை உடைத்து தங்களுடைய ஏரிக்கும், விவசாய நிலத்திற்கும் தண்ணீர் கொண்டு செல்வதற்கு உடைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு உடனடியாக கரைகளை உடைத்து வைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றியும் சட்டவிரோதமாக இந்த குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் கரைகளை வரும் ஜீன் 18 ஆம் தேதி மோர்தானா அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்குள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.  

மோர்தானா அணை வலதுபுற கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் குடியாத்தம் செருவங்கி ஏரியில் தண்ணீர் நிரப்புவதற்கு சாத்திய கூறுகளையும் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின் போது தண்ணீர் வெளியேறும் பகுதியில் ஏற்பட்ட லேசான உடைப்புகளை சரி செய்து நீர் வெளியேறும் பகுதியில் கரைகளை கான்கிரீட் கலவை மூலம் பலப்படுத்தவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  

மோர்தானா அணையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மோர்தானா அணை மற்றும் இடதுபுற கால்வாய்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டது. தற்பொழுது வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திரா நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணை நிரம்பி திறந்துவிடப்ட்ட நீர் பொன்னையாற்றில் 1000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த நீர் பொன்னை ஆற்றின் மேற்குபுற கால்வாய் மூலம் 18 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணிகள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மூலம் நடைப்பெற்று வருகிறது. 

அதேபோல, மோர்தானா அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருகிறது. இன்னும் 2 நாட்களில் மழை பெய்தால் நிரம்பும் வழியும் நிலையில் உள்ளது. மோர்தானா அணையின் உயரம் 11.50 மீட்டர் ஆகும். தற்பொழுது தனது முழு கொள்ளளவான 11.40 மீட்டர் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் நேற்று மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் மோர்தானா அணை இடதுபுற கால்வாயில் உள்ள முட்புதர்களை அகற்றி தூர்வாரவும் கரைகளை பலப்படுத்தவும் சட்டவிரோதமாக கரைகளை உடைத்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். அதன்படி காங்குப்பம், மேல்மயில் , காலாப்பட்டு பகுதியில் ஆய்வு செய்த பொழுது விவசாயிகள் கரைகளை உடைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்வது தெரிய வருகிறது. இந்த வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் உள்ள தூர்வாரி தண்ணீர் கடைமடை பகுதி வரை தங்குதடையின்றி செல்வதற்கு ரூபாய் 48 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகள் வரும் ஜீன் 18 ஆம் தேதிக்குள் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், பொன்னை ஆற்றின் கரையோரம், மோர்தானா அணை நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட உள்ள நிலையில் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் மாடு, மனிதர்கள் கரைகளை கடக்க கூடாது என்றும் வருவாய்த் துறை மூலம் தண்டோர போடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் திரு.ஷேக் மன்சூர், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ஆர்.ஐஸ்வர்யா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் திரு.விஸ்வநாதன், திரு.குணசீலன், உதவி பொறியாளர்கள் திரு.கோபி, திரு.தமிழ்செல்வன், வட்டாட்சியர் திருமதி.வத்சலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 

*******

செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.

 




No comments

Thank you for your comments