முதல்வரின் சூளுரை நிறைவேற்ற... உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு?
சென்னை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சூளுரை நிறைவேற்ற தனது மகன் உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகள், திட்டங்களுக்கு சரியான ஆள்களை நியமித்து, அவற்றை சிறப்பாக செயல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
புதிதாக அவர் அமைக்கும் குழுக்களும் அதில் இடம்பெறும் பிரமுகர்களும் கவனம் ஈர்க்கின்றனர்.
அதற்கு உதாரணம், ஆளுநர் உரையில் அறிவித்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைகளை வழங்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள பழம்பெரும் மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சியும் ஒன்று.
`சென்னை மாநகராட்சியின் மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்’ என்ற பெருமைக்குரியவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னையை 'சிங்காரச் சென்னை’யாக மாற்றுவேன் என்று சூளுரைத்தார்.
அதன்படி, ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சிங்காரச் சென்னைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், சென்னையில் மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், சிறிய பாலங்கள், சாலை விரிவாக்கம், நடைபாதை அமைத்தல், சாலைப் பராமரிப்பு, பூங்காக்கள் அமைத்தல், கடற்கரை சீரமைப்பு போன்ற பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையில் இன்று பார்க்கும் முக்கிய பாலங்கள் அவரது காலத்தில் அமைக்கப்பட்டன.
2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், சிங்காரச் சென்னை திட்டம் அப்படியே நின்றபோனது. பின்னர் 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் இந்தத் திட்டம் கையிலெடுக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டன...
2011-ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், சிங்காரச் சென்னை திட்டம் நீர்த்துப்போனது.
கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட முதல்வரின் கனவுத் திட்டம் தற்போது மீண்டும் `சிங்காரச் சென்னை திட்டம் 2.0’ என்ற பெயரில் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தப்போவதாகக் கூறப்பட்டிருக்கிறது.
இம்முறை பல்வேறு சிறப்பம்சங்களோடு இந்தத் திட்டம் தயாராகிவருகிறது.
*மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் உயர்த்துதல்,
அதாவது, சென்னை மாநகரின் அனைத்து கார்ப்பரேசன் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் ஸ்கூல் மற்றும் உயர்கல்வி வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
*நெரிசல் அதிகமுள்ள மற்றும் தேவையான இடங்களில் மேம்பாலங்கள் கட்டுதல்,
*சுரங்கப்பாதைகளை உருவாக்குதல்,
*ரயில் நிலையங்களை மேம்படுத்துதல்,
*கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்தி மேம்படுத்துதல்,
* சிங்காரச்சென்னை 2.0வில் முக்கியமானது “Project Blue”. இத்திட்டத்தில் சென்னையில் கடற்கரைப்பகுதிகளின் வளர்சியை ஊக்குவிக்க முக்கிய திட்டங்கள் போடப்பட்டுள்ளன.
*கடற்கரைகளை அழகுபடுத்துதல், மேம்படுத்துதல்,
*கடலுக்கு அடியில் மீன் அருங்காட்சியகம் அமைத்தல்,
*கடற்கரைகளைச் சுற்றி நீர் விளையாட்டுகள் அமைத்து அதன் மூலமும் அரசுக்கு வருவாய் உருவாக்குதல்,
*பூங்காக்களைச் சீரமைத்து மேம்படுத்துதல்,
*செல்லப்பிராணிகளுக்கு பிரத்யேக பூங்கா அமைத்தல், ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது.
*மாற்றுத்திறனாளிகள் கடலைப் பார்த்து ரசிப்பதற்காக பிரத்யேகமான தளங்கள் என சென்னையின் பீச்கள் இனிமேல் ஜொலிக்கப்போகிறது.
*திருவொற்றியூர், உத்தண்டி உள்ளிட்ட ஆறு இடங்களின் கடற்கரை முகப்புதோற்றம் மாற்றியமைப்பு,
*BIOROCK Technology மூலமாக பவளப்பாறைகள் அமைப்பது,
*மாணவர்கள் அறிவியல, கணிதம் ,இஞ்சினியரிங் மற்றும் டெக்னாலஜி தொடர்பான தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள science park அமைக்கப்படவிருக்கிறது.
*பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து இருக்கும் சென்னையின் முக்கியமான பாரம்பரிய இடங்களான மாடிப் பூங்கா, விக்டோரியா ஹால் உள்ளிட்ட இடங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
இந்நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை யார் பொறுப்பில் விடுவது என்பது குறித்து ஸ்டாலின் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக கோட்டை வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதாவது தனது மகன் உதயநிதி ஸ்டாலினிடம் இந்த பொறுப்பை விட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
திமுக வாரிசு அரசியல் செய்கிறது என்ற விமர்சனம் உடனடியாக வைக்கப்படும் என்பதால் அது தவிர்க்கப்பட்டது. ஆனால் இதுபோன்ற பொறுப்பை வழங்குவதில் விமர்சனம் எழாது என்கிறார்கள்.
மு.க.ஸ்டாலினைப் போல் உதயநிதியும் சென்னை வளர்ச்சித் திட்டத்தில் பங்கு வகித்தால் அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என கருதுகிறார்களாம்.
எது எப்படியானாலும் சென்னையின் சூழலியல், மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பொதுமக்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்போவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆக மொத்தம் கடந்த 10 வருடங்களகப் புறக்கணிக்கப்பட்ட சென்னை திட்டங்கள், முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சிங்காரச் சென்னை2.0 வாக மாறவிருக்கிறது.
No comments
Thank you for your comments