பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த பாதையிலேயே கழக ஆட்சி பீடு நடை போடும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காஞ்சிபுரம்:
பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த பாதையிலேயே கழக ஆட்சி பீடு நடை போடும்! என்று சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள பார்வையாளர் குறிப்பேடு புத்தகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி கையொப்பம் இட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வருகை தந்தார்.
அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது அங்குள்ள பார்வையாளர் குறிப்பேடு புத்தகத்தில்,
"மக்களிடம் செல்;
அவர்களுடன் வாழ்;
அவர்களிடமிருந்து கற்றுக் கொள்;
அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்"
இதுபேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரை
அவர் வகுத்து தந்த
பாதையிலேயே
கழக ஆட்சி
பீடு நடை போடும்!
என்பதை உறுதி ஏற்கிறேன்...
நன்றி..
என்று பார்வையாளர் குறிப்பேடு புத்தகத்தில் முதலமைச்சர் எழுதி கையொப்பம் இட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வழியெங்கிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அண்ணாவின் நினைவு இல்லம் அருகே கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கா.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கா.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தை இன்று பார்வையிட்டேன்.
"மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்" என்று பேரறிஞர் பெருந்தகை நமக்கு வகுத்து தந்த பாதையிலேயே கழக ஆட்சி பீடு நடை போடும்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



No comments
Thank you for your comments