ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்ட ஓபிஎஸ்... ஆடிப்போன அதிமுக அலுவலகம்!
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னரே விரிசல் ஏற்பட தொடங்கியது. தேர்தலுக்கு முன்பாக யார் முதல்வர் வேட்பாளர்? என்று ஓ.பி.எஸ்.சுக்கும், இ.பி.எஸ்.சுக்கும் நடந்த போட்டியில் இ.பி.எஸ் வென்றார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய பிறகும் ஓ.பி.எஸ்.சுக்கும், இ.பி.எஸ்.சுக்கும் இடையே போட்டி நிலவியது.
எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. கடைசியில் ஓ.பி.எஸ்.சின் முழு சம்மதம் இல்லாமலேயே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அமர்ந்தார் இ.பி.எஸ். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓ.பி.எஸ் தனியாக அறிக்கை விட ஆரம்பித்தார். அதுவும் பெரும்பாலான அறிக்கைகள் திமுக அரசை பாராட்டியே இருந்தன. இதற்கு போட்டியாக இ.பி.எஸ்.சும் தனியாக திமுக அரசை விமர்ச்சித்து அறிக்கை வெளியிட அதிமுக பரபரத்தது. தொண்டர்களும் இ.பி.எஸ் ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் என பிரிந்து ஆள் ஆளுக்கு புகழ்ந்து போஸ்டர் ஒட்ட ஆரம்பித்த்தனர்.
இந்த நிலையில் தான் சசிகலா மீண்டும் அதிமுகவில் நுழைவதற்கான முயற்சியை கையில் எடுக்க ஆரம்பித்தார்.தொடர்ந்து சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ ஒட்டுமொத்த அதிமுக தலைமையையே ஆட்டம் காண வைத்தது. சசிகலாவின் இந்த செயலே எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்காமல் பிடிவாதமாக இருந்த ஓ.பி.எஸ் மனசை கரைக்க இ.பி.எஸ்-க்கு சாதகமாக அமைந்தது.
இதனை தொடர்ந்துதான் ஓ.பி.எஸ் எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஓ.பி.எஸ் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும், சசிகலா அவருடனும் போனில் பேசியதாக செய்திகள் வலம் வருகின்றன. ஓ.பி.எஸ் இன்னும் முழு திருப்தியுடன் இல்லை எனவும், அதிமுகவில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இன்னும் தனியே செயல்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஓ.பி.எஸ் எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடந்த 14-ம் தேதி இது வெளிப்படையாக தெரிந்தது.
எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்ற பிறகு ஓ.பி.எஸ் காரில் கிளம்பி கொண்டிருந்தார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெளியே நின்ற பெண் தொண்டர்கள் உள்பட பலர் 'ஓ.பி.எஸ் வாழ்க' என்று கோஷம் எழுப்பினார்கள். இதனையடுத்து காரை நிறுத்திய ஓ.பி.எஸ் ''எப்போதும் எம்.ஜி.ஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்றே கோஷம் எழுப்ப வேண்டும்'' என்று அறிவுரை வழங்கினார். இதன் பின்னர் அந்த தொண்டர்கள் ''எம்.ஜி.ஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க'' என்று கோஷம் எழுப்பினார்கள். ஓ.பி.எஸ்.சின் இந்த செயலால் அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் நெகிழ்ந்து போனார்கள். இதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பேசத்தொடங்கினர்.
No comments
Thank you for your comments