Breaking News

கொரோனாவால் எளிமையாக திருமணம்.. மிச்சமான ரூ.37.66 லட்சம் கொரோனா பணிக்கு நன்கொடை... குவியும் பாராட்டுகள்...

திருப்பூர்: 

எளிய முறையில் திருமணத்தை நடத்தியதால் மிச்சம் ஆன 37.66 லட்ச ரூபாய் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வழங்கிய திருப்பூர் மணமக்களை பலரும் பாராட்டி வருகின்றனர். 

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை கடந்த மாதம் ஏற்பட்டது. தினசரி கொரோனா பாதிப்பு ஒருகட்டத்தில் அதிகபட்சமாக 35 ஆயிரத்தைக் கூட தாண்டியது. 

திருப்பூரை சேர்ந்த அருள்செல்வம் என்பவரின் மகன் அருள்பிரனேஷ். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த கவுரிசங்கர் என்பவரது மகள் அனு என்பவருக்கும் நேற்று எளிய முறையில் திருமணம் நடத்தப்பட்டது. காங்கேயம் - வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு மிக எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடத்தப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாகத் திருமணத்தை எளிமையாக நடத்தியதால், மீதமான பணத்தை நற்பணிகளுக்கு நன்கொடையாக வழங்க தம்பதி முடிவு செய்தனர். 

திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு 5 லட்ச ரூபாய், 

பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு 11 லட்ச ரூபாய், 

புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு - 2 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கினர்.

மேலும், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்தில் ஐசியு யூனிட் அமைக்க 7.66 லட்ச ரூபாய், 

மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் எட்டு குடும்பங்களுக்கு 7 லட்ச ரூபாய் என மொத்தம் 37.66 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கினர்.

கொரோனா பரவல் காரணமாகத் திருமணத்தை எளிமையாக நடத்தியதால், மீதமான பணத்தை நற்பணிக்காக அளித்ததாக, அருள்செல்வம் கூறினார். கொரோனா பாதிப்பு காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவமனைகள், அமைப்புகள் ஆகியவற்றுக்கு நிதியுதவி அளித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், புதுமண தம்பதி திருமணம் முடிந்த கையோடு செய்த உதவியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

No comments

Thank you for your comments