Breaking News

கோவிட் பரவலைத் தடுக்க லாக்டவுன் முடிவு..! இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை

 ஆமதாபாத், ஏப்.21-

குஜராத் மாநிலத்தில் கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க மாநிலத்தில் லாக்டவுன் அமல் செய்யப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் குஜராத் மாநில கிளை தலைவர் தேவேந்திர பட்டேல் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.



குஜராத் மாநில உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து, கோவிட்-19 மாநிலமெங்கும் படுவேகத்தில் பரவுவதை தடுக்க பொதுநல மனு ஒன்றை தானாக பதிவு செய்து விசாரிக்க தொடங்கியது. இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள 30,000 டாக்டர்கள் குஜராத் மாநில கிளையில் அங்கம் வகிக்கிறார்கள். அவர்களின் சார்பாக கோவிட் பரவுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிக்கும்படி குஜராத் மாநில உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. குஜராத் மாநில உயர்நீதிமன்ற ஆணையை ஏற்று இந்திய மருத்துவ சங்கத்தின் குஜராத் மாநில கிளை தலைவர் தேவேந்திர பட்டேல் நேற்று உயர்நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் சாட்சியம் அளித்தார்.

அப்பொழுது குஜராத் அரசு மாநிலம் எங்கும் 2 வார காலத்துக்கு முழு லாக் டவுன் அமல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். குஜராத் மாநில அரசு அது சாத்தியமல்ல என்று கருதினால் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல் செய்ய வேண்டும். தங்கள் வீட்டுக்கு வெளியே மக்கள் நடமாட்டம் இல்லாமல் தடுப்பதற்கு அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உதவி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் குஜராத் மாநில கிளை தலைவர் தேவேந்திர பட்டேல் தெரிவித்த கருத்துக்கு மாநில அரசின் வழக்கறிஞர் மனீஷா ஷா எதிர்ப்பு  தெரிவித்தார். குஜராத் மாநில மக்களின் உயிரையும் அவர்கள் வாழ்க்கை நலனையும் காப்பாற்ற குஜராத் அரசு கடமைப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார். இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு குஜராத் மாநில உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

No comments

Thank you for your comments