ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் "ப" வைட்டமின் கொடுத்தால்தால் பணி!
வேலூர், ஏப்.21-
ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் "ப" வைட்டமின் கொடுத்தால் மட்டுமே பணி முடித்து தரப்படுகிற அசாதாரண நிலை நிலவுகிறது. இதை மாவட்ட பதிவாளர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது ரமணன் பணியாற்றுகிறார். இவர் பணம் ஒன்றில் மட்டுமே குறியாக இருக்கிறார் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதற்கு காரணம் இந்த சார் பதிவாளர் திருப்பத்தூரில் இருந்து வேலூர் சார் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஆம்பூருக்கு சார் பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது மீண்டும் வேலூர் செல்ல காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் எங்கு சென்றாலும் பணம் பணம் என்று நச்சரித்து கொண்டே இருப்பாராம். வீட்டுக்கு செல்லும் போது லட்சங்களுடன் செல்வதையே இவர் விரும்புவாராம். காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் இவர் வசித்து வருகிறார். பணத்தை தவிர வேறு எதுவும் இவருக்கு தெரியாதாம். ஆம்பூரில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் இவரது நச்சரிப்பை தாங்க முடியாமல் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கும் நிலைதான் இன்று நிலவுகிறது. இவர் இரண்டு பத்திர எழுத்தர்களை தனக்கு புரோக்கர்களாக நியமனம் செய்து வைத்துக் கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் பணிகளை மட்டுமே அவர் முடித்து தருகிறாராம். மற்றபடி பொதுமக்கள் நேரடியாக கொண்டு செல்லும் பணிகளை முடித்து தராமல் இழுத்தடித்து வருகிறாராம். இந்த குற்றச்சாட்டு இவர் மீது தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. பணத்தை பார்த்தால் மட்டுமே கையொப்பம் போடுகிறாராம். பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த நபர்கள் மீது தனது எரிச்சலை அதிகம் காண்பிக்கிறாராம்.
அதிகாரி என்ற தோரணையில் பொதுமக்களை மிரட்டி பணிய வைக்கிறாராம் இந்த கெட்டிக்காரர். இவர் செல்லும் இடமெல்லாம் பணம் கொழிக்கும் இடங்களாகவே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பணத்தை பார்த்தால்தான் பணியை தொடருவார். பணத்தை காண்பிக்கவில்லை என்றால் எரிந்து விழுவதோடு அந்த கோப்புகளை அப்படியே மூடி எந்த நபர் வருகிறாரோ அவரிடம் கொடுத்து அனுப்பி விடுகிறார் இந்த கடமை வீரன் ரமணன். ரமணன் என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்படி ஊழல் பெருச்சாளியாக வலம் வருகிறார்.
ரமணா படத்தில் ஊழலை ஒழித்தார் கேப்டன் விஜயகாந்த். இந்த ரமணனோ ஊழல் செய்து பொதுமக்கள் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
இப்படித்தான் வேலூர் மாவட்டத்தில் கண்ணமங்கலத்தில் உள்ள சார் பதிவாளர் (பொ)அலுவலகத்திலும் பணத்தை கொடுத்தால்தான் பணி முடியும் என்ற நிலை நிலவுகிறது. கையில காசு வாயில தோசை என்று சொல்வது போன்று லஞ்ச லாவண்யம் சார் பதிவாளர் அலுவலகங்களில் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் இதை மாவட்ட பதிவாளர்கள் கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன்...? என்று பொதுமக்கள் சந்தேக கேள்வி எழுப்புகின்றன.
வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம், செய்யார் ஆகிய ஒவ்வொரு மாவட்ட பதிவாளர்கள் கீழ் சுமார் 10 சார் பதிவாளர்கள் இயங்குகின்றனர். இந்த சார்பதிவாளர்களுக்கு மாவட்ட பதிவாளருக்கு தலா ரூ..... குறிப்பிட்ட தொகை தினமும் கப்பம் கட்டவேண்டும் என்று எழுதபடாத விதியாக உத்தரவு இடப்பட்டுள்ளதாக சார்பதிவாளர்கள் வட்டராத்தில் கூறப்படுகிறது... இதன் உண்மை நிலவரம் என்னவென்று மாவட்ட பதிவாளர்களே விளக்கம் அளிக்க வேண்டும்..
லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரும் தங்கள் கண்ணை சார் பதிவாளர் அலுவலகங்கள் மீது செலுத்தினால் பல திமிங்கிலங்கள் சிக்கும். இதற்கு நிரந்தர தீர்வு காண்பது எப்போது என்ற ஏக்கம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு அட்டூழியங்கள் நடந்தாலும் நடவடிக்கை என்னவோ மந்தமாக உள்ளது எதற்கு என்பது புரியாத புதிராகவே உள்ளது. இனிவரும் காலங்களில் சார் பதிவாளர் அலுவலகங்கள் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் பிடிக்குள் கொண்டு வரப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments
Thank you for your comments