வேலூர் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் 7 பேர் பலி...! ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமல்ல..
வேலூர், ஏப்.21-
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் வேலூர் அரசு மருத்துவமனையில் ஏழு பேர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதை மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால் மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமே இதற்கு அடிப்படை காரணமாகும் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றில் தினமும் 100 முதல் 150 பேர் வரை வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் காலை முதல் அடுத்தடுத்து ஏழு பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தனர். உடல்கள் அவசரகதியில் ஒப்படைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பிரிவில் 121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதய நோய் போன்ற பல்வேறு காரணங்களால் ஏழு பேர் இறந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறந்துள்ளதாக வெளியான செய்தி தவறானது. நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படவில்லை. வழக்கமான முறையில்தான் ஆக்சிஜன் பைப் லைன் பராமரிப்பு பணி நடந்துள்ளது. அதில் பிரச்னையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் கூறும்போது,
ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை. கொரோனா தொற்றிலிருந்து அவர்கள் மீண்டு விட்டனர். இதயநோய் போன்ற பிரச்னைகளால் இறந்திருக்கலாம் என்றார்.மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கூறியதாவது: வேலூர் அரசு மருத்துவமனை ஐ.சி.யூ., பிரிவில் 145 மற்றும் ஆக்சிஜன் வசதியில் 360 படுக்கைகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. ஆனால் நேற்றுமுன்தினம் ஆக்சிஜன் சிலிண்டர்களில் இருந்து கொரோனா வார்டு, சிறப்பு வார்டுகளுக்கு செல்லும் பைப் லைன், ஐஸ் போல உறைந்து விட்டது. இதனால் சிறிது நேரம் ஆக்சிஜன் செல்லவில்லை. தொழில்நுட்ப கோளாறுதான் காரணம். கடும் வெயிலால் சிலிண்டர்களில் நிறைய இடங்களில் கசிவு ஏற்பட்டு ஆக்சிஜன் வெளியேறி விட்டது. இப்பிரச்னையை கண்டுபிடித்து சரி செய்வதற்குள் ஏழு பேர் பலியாகி விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் எது உண்மை என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. உண்மையை ஏன் மூடி மறைக்க வேண்டும். உள்ளதை உள்ளவாறு கூறினால் என்ன தலையா போய்விடும். தவறான தகவல்களை பரப்பும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் ஈடுபடுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக பரபரப்பாக பேசப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை என்று தகவல் நெற்றி பொட்டில் அடித்தவாறு கூறப்பட்டாலும் இதை ஊர்ஜிதப்படுத்த அரசு அதிகாரிகள் தயாராக இல்லை. உண்மையை மூடி மறைப்பதிலேயே குறியா£க உள்ளனர். இதனால் யாருக்கு நன்மை பயக்கப் போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
அரசு மருத்துவமனையில் பணிபுரிவோர் ஏதோ கூலிக்கு மாரடிப்பது போன்று பணியாற்றுகின்றனர். உண்மையாக பணியாற்றவில்லை என்பது மட்டுமே நிதர்சனம். யாரை காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இப்படி பதிலளித்துள்ளார் என்பது தெரியவில்லை. பண்டைய காலங்களில் அரசு மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரி என்று கூறுவார்கள். இது இன்று உண்மையாகியுள்ளது. ஏதோ தர்மத்துக்கு வேலை செய்கின்றனர் போலும் அரசு மருத்துவமனைகளில் என்று சொல்லிக் கொள்ளலாம்.
குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோர் பொறுப்புணர்வோடு பணியாற்றுவது இல்லை. அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கின்றனர். கடமைக்கு பணியாற்றுகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றால் ஏன் ஒரே நாளில் ஒரே நேரத்தில் 7 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கு முதலில் விளக்கம் தரட்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்வதற்கு யாருக்கும் விழிப்புணர்வு இல்லாமல் இல்லை என்று சமூக ஆர்வலர்களும், இறந்தவர்களின் உறவினர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்று அலட்சியமாக பணியாற்றிய பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் மருத்துவத்துறை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் ஒழுங்காக கடமை, பொறுப்புணர்வுடன் பணியாற்றுவார்கள். மாண்டோர் மீண்டதுண்டா என்பது போன்று இறந்தவர்களை மீட்டு தருவார்களா மருத்துவத்துறை ஊழியர்கள். செய்வதையெல்லாம் செய்து விட்டு சாரி என்று சாக்குபோக்கு சொல்வது போன்று உள்ளது. பணியில் கவனக்குறைவு இருந்ததுதான் உண்மை. இவர்கள் சாரி சொல்லி விட்டால் இறந்த 7 பேரும் உயிர்பெற்று விடுவார்களா? என்பதே இறந்தவர்களின் உறவினர்கள் கேட்கும் ஒட்டுமொத்த கேள்வியாக உள்ளது. இதில் எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கு முன் உதாரணமாக அமைய வேண்டும் என்பதே இறந்த உறவினர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மருத்துவத்துறை மற்றும் தமிழக அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உயிரிழந்தவர்கள் விவரம் வருமாறு:-
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 68), திருவண்ணாமலை மாவட்டம் அழகுசேனை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (56) மற்றும் பிரேம் (40), திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் (66), காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த லீலாவதி (72), விருதம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன், கபாலி (37).
இவர்களில் லீலாவதி, ராஜேஸ்வரி, வெங்கடேசன், செல்வராஜ் ஆகிய 4 பேரும் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மற்ற 3 பேரும் இதய கோளாறு, சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களால் அனுமதிக்கப்பட்டு பொது வார்டில் இருந்தவர்கள் ஆகும்.
7 பேரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக அவர்களுடய உறவினர்கள் உறுதியாக குற்றம் சாட்டுகின்றனர். ஆக்சிஜன் சரிவர சப்ளை இல்லாத பிரச்சினை, அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் மெத்தனமாக கண்டும், காணாமல் இருந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.
அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன், ஐஸ் கட்டியாக உறைந்து விட்டதாகவும், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது. ஐஸ் கட்டியாக உறைந்ததால் ஆக்சிஜன் பிளான்ட்டில் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஐஸ்சை கரைக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மருத்துவமனை நிர்வாகத்தில் அலட்சியம் என்பதை இந்நிகழ்வு தெளிவாக காட்டுகின்றது....
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரே நாளில் 7 நோயாளிகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments
Thank you for your comments