வேலூர் மாநகராட்சியில் 2 எக்சிகியூடிவ் இன்ஜினியர்கள் இருந்தும்... 60 வார்டுகளும் மண்ணாக மாறிய அவலம்!
வேலூர், ஏப்.21-
வேலூர் மாநகராட்சியில் 2 எக்சிகியூடிவ் இன்ஜினியர்கள் பணியில் இருந்தும் 60 வார்டுகளில் உள்ள சாலைகள் அனைத்தும் மண்ணாக மாறி புழுதி பறக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே கொரோனாவால் அவதிபடும் பொதுமக்கள், குண்டுகுழி சாலையால் தினந்தோறும் படும் அவதிகளை சொல்லி மாளாது. மாநகராட்சி ஆணையராவது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சி பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் என்னவோ ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணிகளை விரைந்து மேற்கொள்ளவே 2 எக்சிகியூடிவ் இன்ஜினியர்களை பணியமர்த்தியுள்ளனர். ஆனால் அவர்கள் மக்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து தருவதே இல்லை. அத்துடன் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு சொகுசாக காலம் கழித்து வருகின்றனர். வெளியில் வருவதே இல்லை. என்ªன்ன பணிகள் எந்தெந்த வார்டுகளில் நடைபெறுகிறது என்பதும் அவர்களுக்கு தெரியாது.
மாறாக, அவர்கள் கண்டதெல்லாம் எந்த பணிக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக உள்ளனர். அத்துடன் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதில் மிகவும் ஆர்வமாக பணியா£ற்றுகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்க போன் செய்தால் அவர்களது போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்றறோ அல்லது ரிங் போனால் அதை எடுத்து தகுந்த பதில் அளிப்பதும் இல்லை. இப்படியே காலம் கழிந்து கொண்டுள்ளது. காலம் உருண்டோடுகிறது.
பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற ரீதியில் ஒரு மண்டல உதவி ஆணையருடன் ரகசியமாக கைகோர்த்து கொண்டு ஒரு எக்சிகியூடிவ் இன்ஜினியர் செயல்படுகிறார் என்ற புகார் பொதுமக்கள் மத்தியில் உலா வருகிறது. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்கள். கமிஷன் தரும் இடம் சொர்க்கம் என்கிறார் எக்சிகியூடிவ் இன்ஜினியர். இப்படி ஒரு அதிகாரி வேலூர் மாநகராட்சிக்கு தேவையா? என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்துள்ளது. 60 வார்டுகளிலும் சாலைகளை உருத்தெரியாமல் உடைத்து புதை சாக்கடை எனப்படும் (பாதாள சாக்கடை) ஆழ் கழிவுநீர் கால்வாய் அமைத்துள்ளனர்.
இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி வர மூடப்படுவது இல்லை. சாலைகள் வாயைப் பிளந்து கொண்டு பல்லை இளித்து கொண்டு காணப்படுகிறது. முன்னால் செல்லும் வாகனங்களுக்கு பின்னால் செல்வோர் மண் புழுதியில் முகத்தில் பவுடர் பூசியது போன்று மண்ணை பூசிச் செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் மேடுபள்ளம் குண்டுகுழி சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவதும் அவ்வப்போது அரங்கேறிவருகிறது... இவ்வாறு வேலூர் மக்களின் நிலைமை மோசமாக உள்ளது.
அதுமட்டுமின்றி சத்துவாச்சாரி பேஸ்&1 பகுதியில் பட்டா நிலங்களில் பாதாள சாக்கடை தோண்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களிடம் பெரும் பிரச்சனையானது... இவ்வாறு மெத்தனமாகவும், பொதுமக்களை கஷ்டபடுத்துவதுமாக ஒப்பந்தாரர்கள் பணி உள்ளது. இதையும் கண்டும் காணாமல் கமிஷன் வாங்கிகொண்டும் கமுக்கமாக பணியாற்றுகின்றனர் மாநகராட்சியினர்...
அதிகாரிகள் ஹாயாக உள்ளனர்... யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன... நமக்கு மாதம் பிறந்தால் மாத ஊதியம் கிடைத்து விடுகிறதா? போதாத குறைக்கு கிம்பளம் அடிக்கடி கிடைத்து விடுகிறதா... என்று அதிலேயே குறியாக உள்ளனர் எக்சிகியூடிவ் இன்ஜினியர்கள்... போதாத குறைக்கு ஒருவருக்கு பதில் இருவர் நியமனம் செய்துள்ளது உள்ளாட்சி துறை. ஆனால் இங்கு நடப்பதோ வேறு மாதிரியான டீலிங் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
பொதுமக்களுக்கு சேவை செய்ய அதிகாரிகளா? அல்லது அதிகாரிகளுக்காக பொதுமக்களா? என்பது இன்றளவும் உறுதி செய்யப்படாமல் உள்ளது வேலூர் மாநகராட்சியில் என்றால் பார்த்து கொள்ளுங்கள். வேலூரில் பொலிவுறு திட்டத்துக்கு வரும் நிதி மாநகராட்சி அதிகாரிகள் சாப்பிட்ட பிறகுதான் பணிக்கு ஒதுக்கப்படுகிறது. முதலில் அந்த நிதியில் இருந்து தனது கமிஷன் தொகையை எடுத்து கொண்டுதான் குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு பணத்தை வழங்குகின்றது வேலூர் மாநகராட்சி நிர்வாகம். இப்படி அதிகாரிகள் பங்கு போட்டு தனது பங்குத்தொகையை எடுத்து கொண்டு ஒரு கணிசமான தொகையை ஒப்பந்ததாரரிடம் வழங்குகின்றனர். அவர் அதில் எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு தொகையை சுருட்டிக் கொண்டு மீதமுள்ள தொகையில் பணியை முடித்து தருகிறார். அப்படி என்றால் பணியின் தரம் எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் பணியாற்றுகின்றனரா இல்லையா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாநகராட்சியின் மீது ஒரு கண் வைத்தால் போதும். தூண்டிலில் பெரிய மீன் சிக்குமா என்பதைவிட திமிங்கலமே சிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பொதுமக்களுக்கு வேண்டியதை வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதுபோன்ற அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து விட்டு பணியாற்றும் எக்சிகியூடிவ் இன்ஜினியர்களை பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். உள்ளாட்சி துறை நிர்வாகம் வேலூருக்கு பணியாற்றக் கூடிய அதிகாரிகளை பணிநியமனம் செய்யுமா? இல்லை இதுபோன்ற ஊழல் அதிகாரிகளையே வைத்துக் கொண்டு அழகு பார்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments
Thank you for your comments