மேஷ ராசிக்கு அதிர்ஷடம் அள்ளிதரும்.... அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் 2021
குரு பகவான் மகர ராசியில் இருந்து அதிசாரமாக
கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார்....
குரு பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.
குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை, பழக்க வழக்க குணங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் தரும்.
குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து சிறப்பு பார்வையாக 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும், தோஷம் விலகி விடும். நீசம் பெற்ற கிரகங்களும் குருபார்வை செய்தால் நீச பங்கம் யோகமாகிவிடும்.
கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2-5-7-11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலன்களையே வழங்குவார்.
அதிசார குருபெயர்ச்சி 2021
முழு சுபரான குருபகவான் தற்போது மகர ராசியில் சஞ்சரித்து வருகின்றார்.
சுமார் 5 மாதம் 10 நாட்கள் அதாவது 162 நாட்கள் கும்ப ராசியில் தங்கியிருப்பார். குரு பகவான் அதிசார காலத்தில் கும்ப ராசியில் அவிட்ட 2,3,4ஆம் பாதங்களிலும் சதய நட்சத்திரம் ஒன்றாம் பாதத்திலும் பயணம் செய்வார்.
பிலவ வருடம் ஆவணி மாதம் 29ஆம் தேதி செப்.15ம் தேதி மீண்டும் மகர ராசிக்கு திரும்புவார்.
குரு நவம்பர் 13ம் தேதி மீண்டும் கும்ப ராசிக்கு முறைப்படி பெயர்ச்சி ஆவார்.
குரு அதிசாரம் என்றால் என்ன?
சூரிய மண்டலத்தில் சூரியன், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் அவ்வப்போது அதிசார, வக்ர நிலை காரணமாக முன்னும், பின்னும் செல்லும்.
ஜோதிட விதிப்படி குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிப்பார். இதில் சில காலம் மட்டும் அதிசார நிலைக்கு சென்று வருவார்.
அந்த வகையில் குரு தற்போது சாதாரணமாகச் செல்லும் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் நகரத் தொடங்குவதால் தான் இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதே சமயம் சில காலத்தில் அதன் வேகம் குறைந்து மீண்டும் பழைய நிலைமையை அடைய வேகம் குறையத் தொடங்கும்.
சாதாரண நேரங்களைப் போல் இல்லாமல், தன் பயணத்தில் வேகம் எடுக்கும் குரு ஞானம், புத்திசாலித்தனம் மற்றும் மகிழ்ச்சியைச் சற்று அதிகமாக வழங்குபவர். அசாதாரண பணிகளைச் செய்யும்போது புகழ் மற்றும் மரியாதையை அடைகிறார்கள்.
குரு பெயர்ச்சிக்கும், குரு அதிசார பெயர்ச்சிக்கும் நிறைய மாற்றங்களுடன் கூடிய பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும். சில ராசிகளுக்கு யோக பலன்கள் குரு பெயர்ச்சியின் போது கிடைக்கும். அதுவே அதிசார பெயர்ச்சியின் போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறலாம். சிலருக்கு மோசமான பலன்கள் யோக பலன்களாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
கடந்தாண்டு வெறும் 92 நாட்கள் (3 மாதங்கள்) மட்டுமே அதிசார நிலைக்கு சென்ற குரு பகவான். இந்த முறை தன்னுடைய கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக 162 நாட்கள் வரை அதிசார நிலையாக குரு பகவான் மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.
குருவின் தற்போது அதிசார பார்வை இடம்
பொதுவாக குரு ஒருவரின் ஜாதகத்தில் 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்தால் மிக சிறப்பான யோக பலன்களை அள்ளித்தருவார்.
அந்த வகையில் தற்போது குரு பகவான் அதிசார நிலையாக கும்ப ராசிக்குச் செல்வதால்
மிதுன ராசி - குருவின் 5ம் பார்வை
சிம்ம ராசி - குருவின் 7ம் பார்வை
துலாம் ராசி- குருவின் 9ம் பார்வை
மேஷ ராசிக்கு பொதுவான அதிசார பலன்கள்
அதிர்ஷடம் அள்ளிதரும் அதிசார பெயர்ச்சி
ஜோதிட விதிப்படி குரு பகவான் சஞ்சரிக்கும் இடத்தை விட அதன் பார்வை பலன் மிக அதிகம் என்ற கருத்து உள்ளது. இந்த பார்வைப் பலன் சில நேரங்களில் மிக சிறப்பான யோக பலன்களையும், சில நேரங்களில் சில மோசமான பலன்களைத் தரக்கூடும்.
குருவின் பார்வை மேஷ ராசிக்கு 3,5,7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குருவின் சஞ்சாரம் பார்வையால் மேஷ ராசிக்காரார்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
லாப குரு - பொன்னான காலம்
லாபத்தில் சஞ்சரிக்கும் குருவால் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து மேஷ ராசிக்கு பல்வேறு வகையில் அதிர்ஷ்டம் மற்றும் அனுகூல பலன்கள் கிடைக்கும். கிட்டத்தட்ட 162 நாட்கள் உங்களுக்கு பொன்னான காலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கு இருந்த பிரச்னைகள் எல்லாம் விலகி நிம்மதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
தொழில் முன்னேற்றம்
ஏற்கனவே தொழில் ஸ்தானத்தில் இருந்து உத்தியோகத்தில் பணிச்சுமை ஏற்பட்டும், தொழிலில் சில தடுமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் தற்போது வளர்ச்சிக்கு முன்னேற்றம் தருவதாக இருக்கும் நிலையில் தற்போது லாப ஸ்தானத்திற்கு குரு செல்வதால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் செய்யும் தொழில் பலவகையில் வெற்றி பெறக்கூடியதாக இருக்கும்.
சிலர் தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்பவர்களுக்கு லாபகரமான பலன் உண்டாகும். இதனால் மேஷ ராசியினர் திடீர் அதிர்ஷ்டத்தால் பணக்காரர்கள் ஆக வாய்ப்புள்ளது.
சகோதரர் ஆதரவு :
11ம் இடம் லாப ஸ்தானம் மட்டுமல்லாமல் மூத்த சகோதரருக்குரிய இடம் என்பதால் உங்களின் செயல்பாடுகளுக்கு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் அன்பும், ஆதரவும் சிறப்பாக கிடைக்கும். இதனால் நீங்கள் தடுமாறக்கூடிய காலங்களில் உங்களின் கைப்பிடித்துத் தூக்கி விடக்கூடிய ஆறுதலைத் தருவார்கள்.
குரு பார்வை பலன்கள் (3-5-7- வீட்டில்)
குரு பகவானுக்கு 9, 5ம் பார்வை சிறப்பு பார்வையும், 7ம் பொது பார்வையும் உண்டு.
5ம் பார்வையாக 3வது வீடான மிதுனத்தின் மீது பார்வை:குருவின் 5ம் பார்வையால் மிதுன ராசியை அதாவது இளைய சகோதரர், தைரிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். குரு 3ல் இருந்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை ஏற்றம் உயர்வு உண்டாகும். இதன் மூலம் எந்த ஒரு செயலிலும் தைரியங்கள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். அதே போல் அவர்களுக்கு உதவிகளை செய்வீர்கள். அவர்களுடனான உறவு வலுபடும்.
7ம் பார்வையாக 5வது வீடான சிம்மத்தின் மீது பார்வை:
இந்த காலத்தில் குருவின் 7ம் பார்வையாக 5ம் பாவத்தில் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தனம், புத்திர ஸ்தானத்தனம், பாக்கிய ஸ்தானத்தனம் மீது விழுவது மிகவும் விசேஷமானது.
புதிய சொத்து வாங்கும் யோகம் :
குரு தனகாரகன் என அழைக்கப்படுகிறார். பாக்கிய ஸ்தானத்தனம் மீது பார்வை விழுவதால் புதிய வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படலாம்.
பெரிய வசதி இல்லாதவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய காலமாக அமையும். உங்களின் செயல்பாட்டுக்கு சிறப்பான வெற்றியும், முதலீடுகளுக்கும் நல்ல தன பலன்கள் பல மடங்கு கிடைக்கும். பூர்வீக வழியில் கிடைக்க வேண்டிய லாபங்களை தடையின்றி அடையும் வாய்ப்பு உண்டாகும்.
பிள்ளைச் செல்வம் வரம்
மேஷ ராசிக்கு பிள்ளைகள் வகையில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெற்றோர், பிள்ளை இடையே பிணைப்பு அதிகரிக்கும். மாணவர்களின் கல்வி ஆர்வம் மேம்படும். உயர் கல்வியில் சிறந்த வாய்ப்புகள் அமையும். குழந்தை வரம் வேண்டுவோருக்குக் கிடைக்கக்கூடிய அற்புத காலமாக இருக்கும்.
9ம் பார்வையாக 7வது வீடான துலாம் மீது பார்வை:
குருவின் 9ம் பார்வையாக ராசிக்கு 7ம் இடம் அதாவது மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதனால் திருமண முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும்.
திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நினைத்தது போல சிறப்பாக நடைபெறும். காதல் கை கூடக்கூடிய அற்புதமும் நடக்கும். அதே சமயம் பிள்ளைகளுக்குத் திருமண யோகம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் உங்களுக்கு உதவியும், அனுகூலமும் உண்டாகும்.
மொத்தத்தில் குருவின் அதிசார பலன்களினால் மேஷம் ராசிக்காரர்கள் திடீர் செல்வந்தர் ஆக வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷடம் அள்ளிதர போகின்றது அதிசார குரு பெயர்ச்சி... வாழ்த்துக்கள் அன்பர்களே...!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..
கொரோனா தொற்றிலிருந்து விடுபட மாஸ்க் அணிவோம்...
நமது உரிமை... நமது கடமை... தவறாமல் வாக்களிப்போம்...









No comments
Thank you for your comments