அழகு தரும் மூலிகை குளியல்பொடி
பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்பட்டு 40 வயது தோற்றம் தருகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் தோல் நோய் இன்றி பாதுகாப்பும் கிடைக்கிறது.
தேவையான பொருள்கள்:
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம் (ஆண் 10 கிராம்)
பச்சைப்பயறு 500 கிராம்
கடலப்பருப்பு - 500 கிராம்
பூலாங்கிழங்கு - 200 கிராம்
ஆவாரம்பூ -100 கிராம்
பன்னீர் ரோஜா இதழ்- 100 கிராம்
செம்பருத்தி பூ - 50 கிராம்
மகிழம்பூ- 50 கிராம்,
துளசி - 50 கிராம்
வேப்பிலை - 30 கிராம்
வெட்டிவேர் 200 கிராம்
சந்தனம்- 200 கிராம்,
பூந்தி கொட்டை - 15
வெந்தயம்- 25 கிராம்,
விலாமிச்சை - 200 கிராம்
கார்போக அரிசி-200 கிராம்
ஏலரிசி -200 கிராம்
தும்மராஷ்டம்-200 கிராம்
கோரைக்கிழங்கு 200 கிராம்
கோஷ்டம் - 200 கிராம்
அகில் கட்டை 200 கிராம்
அதிமதுரம் - 50 கிராம்
மரிக்கொழுந்து-100 கிராம்
ஜாதிக்காய் - 10
திரவியப்பட்டை - 10
எலுமிச்சை தோல்- 10
ஆரஞ்சு பழத்தோல்
செய்முறை:
மேற்சொன்ன அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவையெல்லாம் காய வைத்துதான் விற்கப்படும்.
நீங்களே வீட்டில் இருப்பதைப் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் தனித்தனியாக உலர்த்தவும். பருப்பு வகைகளை தனியாகவும். இலைகளை பூவிதழ்களை தனியாகவும் காயவைத்து சேகரிக்கவும்.
எலுமிச்சை தோலை சாறு நீக்காமல் நறுக்கி அப்படியே காயவிடவும். வேப்பிலையை காம்பு நீக்கி கொள்ளுங்கள். துளசி இலையையும் உலர்த்தி கொள்ளுங்கள். இவை நொறுக்கும் அளவு காயவேண்டும். பிறகு இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்துகொள்ளுங்கள். மிஷினில் நைஸாக அரைத்தாலும் அதை மெல்லிய வெள்ளை துணியில் வடிகட்டி சலித்து காற்றுபுகாத டப்பாவில் அடைத்துகொள்ளுங்கள்.
இந்த பொருள்கள் அரைக்கும் போது கடலை பருப்பையும் கால்கிலோ அளவு வாங்கி மிஷினில் தனியாக அரைத்து அதையும் சலித்து வைத்துகொள்ளுங்கள். கடலை மாவு மட்டும் அவ்வபோது அரைத்துகொள்ளவும். ஒரு மாதத்துக்கு மேல் வைத்திருந்தால் அதில் பூச்சி பிடிக்க வாய்ப்புண்டு. மற்ற பொருள்களை அரைத்த மாவு ஆறுமாதங்கள் வரை நன்றாகவே இருக்கும்.
வெந்தயமும் பூந்திகொட்டையும் சேர்ப்பதால் நுரையும் வரும். பாசிப்பயறு மாவு பளபளப்பை தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதைப் பயன்படுத்தலாம்.ஆனால், ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் இதைப் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை மட்டும் நீக்கிவிட்டு இதைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு இந்தப் பொடி மிகவும் நல்லது. குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது. இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயை நீக்காமல் பாதுகாக்க உதவும்.துர்நாற்றம் வருவது தவிர்க்கப்படும்.உடலில் எங்கும் சரும தொந்தரவுகள் வராது. வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும். சருமத்தில் கருமை இருந்தால் அவை நீங்கும்.
பரு, மரு, கருத்திட்டுக்கள் வராமல் தடுக்கப்படும். வியர்க்குரு தொல்லையும் இருக்காது. பெண் குழந்தைகள், பெண்கள் இதைப் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். மீண்டும் முடி சருமத்தில் வளராது. வாக்சிங் செய்யத் தேவையில்லை. முகம் பளபளக்கும்... அழுகு மெருகேரும் என்பதில் ஐயமில்லை...
தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் அல்லது பன்னீரில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.



No comments
Thank you for your comments