Breaking News

தமிழக சட்டசபை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு

சென்னை

தமிழக சட்டசபை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில்  அதிகபட்சமாக பாலக்கோடு - 87.33%  வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. 


தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலின் ஒரே கட்ட வாக்குப்பதிவும், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டசபைகளுக்கு நடைபெறும் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.

மொத்தம் 475 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,53,538 வாக்குப்பதிவு மையங்களில்   வாக்குப்பதிவு நடைபெற்றது.

கொரோனா தொடர்பான சமூக இடைவெளி விதிகளை கருத்தில் கொண்டு, வாக்குபதிவு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-ல் இருந்து 1000 ஆக குறைக்கப்பட்டது.

அனைவரும் பங்கு பெறும் மற்றும் அனைவரும் அணுகக்கூடிய தேர்தலை உறுதி செய்யும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தபால் வாக்கு வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது.

இந்த வாக்காளர்களுக்கு முறையான வசதிகள் வழங்கப்பட்டதை களத்தில் உள்ள பார்வையாளர்கள் உறுதி செய்தனர்.

விதிகளின்படி அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக கடந்தன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இவை சோதிக்கப்பட்டன. மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஒருமுறை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சோதித்து பார்க்கப்பட்டன. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள், நேரடி ஒளிபரப்பு முறையில் கண்காணிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் அதிமுக-திமுக இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க இருந்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போடத் தொடங்கினார்கள். கொளுத்தும் வெயிலிலும் உற்சாகமாக வாக்களிக்க வந்தனர். முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்குச்சாவடி அருகே அனுமதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே மிகவும் ஆர்வமாக வந்து வாக்காளர்கள் ஓட்டு போட்டதை காண முடிந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அதிமுக எம்.எல்.ஏ வி ராஜேந்திரனின் கார் சேதப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மற்றப்படி வேறு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் தேர்தல் அமைதியாகவும் சுமூகவாகவும் நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொளத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் புதிய எந்திரம் வரும்வரை மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீதமும், காலை 11 நிலவரப்படி 26.90 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீதமும், மாலை 3 மணி நிலவரப்படி 53.35 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதமும், இரவு 7 மணி நிலவரப்படி 71.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து ஓட்டு எந்திரங்களும், கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் ‘சீல்' வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவே வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில் 234 தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார். 

தமிழக சட்டசபை தேர்தலில்  234 தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

 தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. 

வாக்குகள் அதிகம் பதிவான  தொகுதிகள்:

பாலக்கோடு - 87.33%

குளித்தலை - 86.15%

எடப்பாடி - 85.6%

அரியலூர் - 84.58%

கிருஷ்ணராயபுரம்-84.14%

முக்கிய வேட்பாளர்கள் தொகுதிகளின வாக்கு பதிவு

முதலமைச்சர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகளும், 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் போட்டியிட்ட போடி தொகுதியில் 73.65 சதவீத வாக்குகளும்,

 பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதியில் 74.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீத வாக்குகளும்,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் 67.43 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 58.41 சதவீத வாக்குகளும், 

பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் 58.4 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


 



No comments

Thank you for your comments