வேலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள்... தொகுதி வாரியான பதிவு
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலின் ஒரே கட்ட வாக்குப்பதிவும், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டசபைகளுக்கு நடைபெறும் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.
மொத்தம் 475 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,53,538 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
கொரோனா தொடர்பான சமூக இடைவெளி விதிகளை கருத்தில் கொண்டு, வாக்குபதிவு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-ல் இருந்து 1000 ஆக குறைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அதிமுக-திமுக இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க இருந்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போடத் தொடங்கினார்கள். கொளுத்தும் வெயிலிலும் உற்சாகமாக வாக்களிக்க வந்தனர். முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்குச்சாவடி அருகே அனுமதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே மிகவும் ஆர்வமாக வந்து வாக்காளர்கள் ஓட்டு போட்டதை காண முடிந்தது.
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் வாக்கு பதிவுகள்
காட்பாடி தொகுதியில் 74.00 சதவீதம்
வேலூர் தொகுதியில் 70.25 சதவீதம்
அணைக்கட்டு தொகுதியில் 77.05 சதவீதம்
கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 76.50 சதவீதம்
குடியாத்தம் (தனி) தொகுதியில் 72.56 சதவீதம்
ஆகிய 5 தொகுதிகளிலும் சராசரியாக 73.98 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.


No comments
Thank you for your comments