பஸ் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்
சென்னை, ஏப்.21-
போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போடவேண்டும் இல்லையேல் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படும் ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர், அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு:
மாநகரப் போக்குவரத்துக்கழகம் பொதுமக்களிடம் நேரிடையாக சேவை செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை நிறுவனமாகும், குறிப்பாக ஒட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் பேரிடம் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள், இதனால் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன, தற்போது 2 வது கட்டமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் கட்டாயமாக அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது,
எனவே கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும பெருந்தொற்றான கொரோனா வைரஸ் தாக்காமல் தடுக்கும் பொருட்டு அரசின் தற்போதைய வழிகாட்டுதலின் படி 45 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள் அனைவரம் கோவிட் ஷீல்டு அல்லது கோவாக்சின் ஊசிகளை கட்டாயம் செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது,
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கிளை மேலாளர்கள் 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து பணியாளர்களுக்கும் தடுப்பூசியைக் கட்டாயம் செலுத்தி பயனடைய உரிய நடவடிக்கை எடுக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது
மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமேயன்றி மேற்குறிப்பிட்டுள்ள தடுப்பூசியை செலுத்தி கொள்ள தவறும் பட்சத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுமாயின் சிறப்பு விடுப்பு கோரும் பட்சத்தில் சிறப்பு விடுமுறை வழங்கிட இயலாத சூழ்நிலை ஏற்படும் என்பதனையும் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு இந்த சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
No comments
Thank you for your comments