கொரோனா இலவச தடுப்பூசி முகாம்!
வேலூர், மார்ச் 25-
வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டாவது அலை கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி, சுகாதாரத்துறை, ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய கொரோனா இலவச தடுப்பூசி முகாமை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் அவர்கள் 24.03.2021 அன்று துவக்கி வைத்தார்.
கொரோனா பரவலை தடுப்பதற்கு முகக் கவசம் அணிந்தும் பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள் விடுத்து பேசினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, நாடு முழுவதும் இரண்டாவது அலை கொரோனா பரவல் ஏற்பட்டு வருகிறது. நம்முடைய மாவட்டத்தில் பிப்ரவரி மாத இறுதியில் 0.5 சதவீதம் இருந்த பரவல் மார்ச் மாதம் 0.9 சதவீதம் உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க முகக் கவசம் அணியாமல் யாரும் வெளியே செல்ல கூடாது. வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் கை, கால்களை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். கொரோனாவால் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இறப்பு விகிதம் அதிகரிப்பதை தடுக்க கொரோனா கோவிஷீல்ட் மருந்து செலுத்தப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு ஒரேவழி பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்வதே ஆகும். வேலூர் மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 1000 பேருக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இதுவரை முதல்நிலை பணியாளர்கள், செவிலியர்கள், காவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், செய்தியாளர்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் மரு.சித்ரசேனா, மாவட்ட செயலாளர்(நிர்வாகம்) தினேஷ்குமார், மாவட்ட ஆளுநர் பாண்டியன், நிர்வாகிகள் சீனிவாசம், சுரேஷ், சுகுமார், எழில்வானன் தலைமை ஆசிரியர் நெப்போலியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments