காரணை புதுச்சேரியில் பல்லாங்குழி சாலை 3 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத அவலம்!கூடுவாசேரி
புதுச்சேரி :
காரணை புதுச்சேரியில் பல்லாங்குழி சாலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக கடும் அவதிக்குள்ளாகியுள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் சாலையை செப்பனிட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்
.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகா, காரணை புதுச்சேரி கிராம எல்லையின் கடைகோடியில் உள்ள கிருஷ்ணா நகர் மற்றும் தில்ஷாத் நகரில் சுமார் 160 குடும்பங்கள் பிளாட்டில் வசிக்கிறார்கள். இப்பகுதியில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி செய்து தரப்படவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள சாலைகளுக்கு கருங்கல் ஜல்லி போடப்பட்டு, பேபி ஜல்லி, சிப்ஸ் போடப்பட்டு பல மாதங்களாகியும் தார் சாலை போட்டு தரப்படவில்லை என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். கருங்கல் ஜல்லி போடப்பட்டு, கரடு முரடான பாதையாக இருப்பதால் இப்பகுதி வழியே மக்கள் வெளியே சென்று வர பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பஞ்சராவதையும் தடுக்க முடியவில்லை. இதனால் அவரச வேலையாக வெளியில் செல்ல வேண்டியவர்கள் கடும் பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். அரசுக்காக மக்களா? மக்களுக்காக அரசா? என்பதே தெரியவில்லை. இப்படி திரும்பி கூட பார்க்காமல் இருந்தால் எப்படி?. தினந்தோறும் எங்கள் வாழ்க்கையே நரகமாக மாறிவருகிறது என்று கொதிக்கின்னர். இல்லை அப்படியே மண் சாலையாக விட்டிருந்தால் கூட நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதை விட்டு விட்டு தார் சாலை அமைத்து தருவதாக கூறி இப்படி எங்களை அலைகழிக்கின்றனர்.
தேர்தல் நெருங்குகிறது, இது கூட தேர்தலில் எதிரொலிக்க அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்று வாக்காளர்கள் தரப்பில் புலம்ப ஆரம்பித்துள்ளனர். இதை சரி செய்து தருவதாக யார் எழுத்து பூர்வமாக எழுதி உறுதிமொழி தருகிறார்களோ அவர்களுக்கே எங்களுடைய வாக்கு என்று பொதுமக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். வயதானவர்கள் மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே சாலை வசதியை மேம்படுத்தி விரைந்து செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்தை இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர். பல்லாங்குழி சாலை மேம்படுத்தப்பட்டு சீர்மிகு சாலையாக மாறுவது எக்காலமோ என்று ஏங்கி தவித்து காத்துக் கொண்டுள்ளனர் பொதுமக்கள். பொதுமக்களின் கனவு நனவாவது எப்போது அவர்கள் எப்போது நிம்மதியாக வெளியில் நடந்து செல்வார்கள் என்பதை மாவட்ட ஆட்சியர்தான் முடிவு செய்ய வேண்டும்.

No comments
Thank you for your comments