திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு
சென்னை, மார்ச் 25-
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவது எல்லா மாநிலங்களிலும் வாடிக்கையான நிகழ்வாக இருக்கிறது. ஆனால் நாட்டிலேயே தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில்தான் இவற்றை வழங்குவது மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இரு மாநிலங்களிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் 936 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் வருமான வரித்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பறக்கும் படையினருக்கு வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான எ.வ.வேலு திமுக வேட்பாளராக திருவண்ணாமலையில் போட்டியிடுகிறார். எ.வ.வேலு தனது தொகுதியில் சொந்தமாக கல்லூரி நடத்தி வருகிறார். வேறு சில தொழில் நிறுவனங்களும் நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை பிரச்சாரம் பிரசாரம் மேற்கொண்டார். தனது பிரச்சாரத்தில் மத்திய மாநில அரசுகளை கடுமையாக கண்டித்து ஸ்டாலின் பேசினார். அவர் திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்யும் நிலையில் எ.வ.வேலுவும் அவருடன் பிரச்சாரத்தில் இருந்தார்.
இந்நிலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் இல்லம் என ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம்- பரிசுப் பொருட்களை அவருக்கு சொந்தமான இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் துறைக்கு தகவல் வந்தது. இது பற்றி தேர்தல் துறை, வருமானவரித்துறைக்கு தகவல் அனுப்பியது. அவர்கள் உடனடியாக எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனையை தொடங்கினார்கள். இதற்காக வருமானவரித்துறை அதிகாரிகள் 20 வாகனங்களில் பிரிந்து பல்வேறு இடங்களுக்கு சென்றார்கள்.
எ.வ.வேலுவுக்கு திருவண்ணாமலையில் 2 என்ஜினீயரிங் கல்லூரிகள், 2 கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக், ஒரு சர்வதேச பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. கல்வி அறக்கட்டளையும் செயல்படுகிறது. அந்த கல்லூரிகளுக்கு சென்று முதலில் சோதனையை தொடங்கினார்கள்.
திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, மினரல் நிறுவன அலுவலகம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு, வாசலில் நிற்கும் கார்களிலும், பல்வேறு அலுவலகங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடந்தது.
அவர்கள் பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்த பல்வேறு அறைகளிலும் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த அலமாரிகள், பெட்டிகள் மற்றும் சந்தேகப்படும் இடங்கள் பலவற்றிலும் அதிகாரிகள் சோதனை செய்தார்கள். இதில் பணம் மற்றும் பொருட்கள் கிடைத்ததா? என்பது பற்றி எந்த தகவலையும் இதுவரை வருமானவரித்துறை வெளியிடவில்லை.
தி.மு.க. முக்கிய தலைவர்களில் ஒருவரும் வேட்பாளருமான எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று எ.வ.வேலுவை ஆதரித்து திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொள்வதற்காக, நேற்றே திருவண்ணாமலைக்கு சென்று விட்ட மு.க.ஸ்டாலின், எ.வ.வேலுவின் கல்லூரியில்தான் தங்கி இருந்தார். இன்று காலை அவர் பிரசாரத்தை தொடங்குவதற்காக வெளியே சென்ற சிறிது நேரத்தில் வருமானவரி அதிகாரிகள் அங்கு வந்து சோதனையை தொடங்கினார்கள்.
இதற்கிடையே, திருவண்ணாமலையில் பிரசாரத்தை முடித்துக்கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று மதியம் மீண்டும் அதே கல்லூரிக்கு சென்றார். அங்கு மதிய உணவு சாப்பிட்டார். ஒரு பக்கம் வருமானவரித்துறை சோதனை நடந்து கொண்டு இருந்த அதே நேரத்தில், மற்றொரு பக்கத்தில் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு நெருக்கமான 2 நபர்கள் வீடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்கள் இருவருடைய வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் இருக்கும்போதே அதே தொகுதியின் வேட்பாளருக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடப்பது திமுகவினரை இன்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



No comments
Thank you for your comments