Breaking News

பேரணாம்பட்டில் திருவிழாவுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடி பயன்படுத்தியது அம்பலம்!

வேலூர், மார்ச் 23-

பேரணாம்பட்டில் திருவிழாவுக்கு மின்சாரத்தை கொக்கி போட்டு 3 நாட்கள் பயன்படுத்தியுள்ளனர். 


ஆனால் மின் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கில் செயல்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 நாட்கள் திருவிழாவுக்கு திருடப்பட்ட மின்சாரத்துக்கு உண்டான கட்டணத்தை திருவிழா நடத்தியவர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் தரைக்காடு, மதினா நகர் பகுதியில் சையதினா பஹாரெ அலி முர்தஜா சமன் என்ற தர்கா உள்ளது. இந்த தர்காவை சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு மனை போட்டு விற்பனை செய்த வஜீர் அஹமத்  என்பவர் அந்த தர்காவை ஒரு ஓரத்துக்கு மாற்றிக் கொள்ளுமாறு கூறி அதற்கான செலவையும் தந்துள்ளார். 

இதனால் தர்காவை பராமரிக்கும் விழா குழுவினர் அந்த தர்காவை ஓரமாக கொண்டு சென்று புதியதாக அமைத்து கொண்டனர். 

இந்நிலையில் இந்த தர்காவில் கருணைக்கடல் காதர் வலி (ரஹ்) கொடியேற்றும் விழா விமரிசையாக நடந்தது. இதையடுத்து ஜியாபாத் விருந்தும் இடம்பெற்றது. மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஸமாகானி (கவ்வாலி) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய புகழ் பெற்ற உருது, தமிழ் கவிஞர் குல் ரஹாமத் அலியின் கவாலி பாடல்கள் இடம் பெற்றன. 

கவாலி பாடல்கள் சையிதினா பஹாரெ அலி முர்தஜா சமன் இடம்பெற்றது. இந்த தர்கா திருவிழாவை முனவர் அலி முன்னின்று நடத்தினார். இந்த திருவிழா நடத்திக் கொள்ள வீட்டு மனைகள் விற்பனை செய்த தொழிலதிபர் வஜீர் அஹமத்திடம் சென்று முனவர் அலி மின்சாரம் கேட்டுள்ளாராம். 

அதற்கு அந்த வஜீர் அஹமத் தர்கா அருகே செல்லும் மின் கம்பியில் இருந்து கொக்கி போட்டு எடுத்து கொள்ளுங்கள், நான் மின்வாரிய பொறியாளர் கேட்டால் சொல்லிக் கொள்கிறேன் என்று சொன்னதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முனவர் அலி தெரிவித்துள்ளார். இதுபோன்று மின்சார வாரியத்துக்கு மின் இழப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். கொக்கி போட்டு மின்சாரம் திருடி உபயோகப்படுத்தி விட்டு ஒன்றும் அறியாதவர்கள் போன்று உள்ளனர். 

இதனால் மின்வாரியத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் சரமாரியான குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 

இதனால் பேரணாம்பட்டு மின்வாரிய இளமின் பொறியாளர் திருவிழாவுக்கு திருடி பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணத்தை வசூல் செய்வதுடன் மின்சாரம் திருடிய குற்றத்துக்காக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. மின்வாரியத்தின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


காட்பாடியில் அயல்நாட்டு மதுபானங்கள்
மொத்தமாக தனியார் பார்களுக்கு விற்பனை!

வேலூர், மார்ச் 23-

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் டாஸ்மாக் கடையில், மதுபானங்களை மொத்தமாக தனியார் பார்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து விட்டு கல்லா கட்டும் வேலை நடந்து வருகிறது. வேலூரில் காகிதப்பட்டறை மற்றும் காட்பாடி வெல்லக்கல்மேடு பகுதியிலும் அயல்நாட்டு மதுபானங்கள் டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த மதுபானங்களை வாங்கும் குடிமகன்களிடம் கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது. 

அத்துடன் வேலூர் மற்றும் காட்பாடியில் செயல்படும் தனியார் பார்களுக்கு கூடுதல் விலையில் மொத்தமாக விற்பனை செய்து விட்டு இங்கு பணியாற்றும் சேல்ஸ்மேன்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் கல்லா கட்டிக் கொண்டு  செல்கின்றனர். 

இதை தட்டிக் கேட்கும் குடிமகன்களிடம் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். நாங்கள் இப்படித்தான் விற்பனை செய்வோம் தான்தோன்றித்தனமாக பதில் அளிக்கின்றனர். டாஸ்மாக் மண்டல மேலாளருக்கும் கிருஷ்ணமூர்த்தி வாயிலாக நாங்கள் மாமூல் கொடுக்கிறோம் என்று நெற்றி பொட்டில் அடித்தது மாதிரி பதில் சொல்கின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள். அயல்நாட்டு மதுபானங்களை பொதுமக்களுக்கு சில்லரை விற்பனை செய்யாமல் இப்படி கேஸ் கேஸாக மொத்தமாக விற்பனை செய்து விட்டு கல்லா கட்டி வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய டாஸ்மாக் மண்டல மேலாளர் கண்டும் காணாமல் இருந்து வருகிறாரா என்று தெரியவில்லை. இந்த பிரச்னையில் நேரடியாக களம் இறங்கி விசாரணை நடத்தி இப்படி கடையில் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மண்டல மேலாளரும், மாவட்ட மேலாளரும் முன்வர வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புகார்களைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை டாஸ்மாக் என்பது வேறு விஷயம். 

குடிமகன்கள்தானே குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்ற ரீதியில் இருப்பதால் இதுபோன்ற மெகா மோசடிகள் வெளியில் வராமல் மூடி மறைக்கப்படுகின்றன. 

டாஸ்மாக் மண்டல மேலாளர் இதில் ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா? இல்லை கண்டும் காணாமல் விட்டு விடுவாரா? என்பது தெரியவில்லை. மதுரையில் இருந்து பறக்கும் படை குழுவினர் வந்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதும் தெரியவில்லை. இதில் என்னதான் நடவடிக்கை எடுக்கப் போகிறார் வேலூர் மண்டல மேலாளர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



No comments

Thank you for your comments