Breaking News

அதிமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா?--அடுக்கடுக்கான கேள்வி கேட்ட மு.க.ஸ்டாலின்

சென்னை:

அதிமுக  கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? என்று கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்.





திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கும்மிடிப்பூண்டியில் இன்று காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- 



 நான் தேர்தல் நேரத்தில் மட்டும் வர மாட்டேன். எப்போதும் உங்கள் கூடவே இருப்பேன். உங்களுடைய சுக துக்க நிகழ்ச்சியில் உரிமையோடு கலந்து கொள்ளக்கூடியவன் என்பது உங்களுக்கு தெரியும்.  அந்த உரிமையுடன் உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். நான் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பெற்றிருப்பது உங்களுக்கு தெரியும். 13 வயதில் திருவாரூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பயின்ற போதே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞரின் மகன்தான் நான்.

திமுகவின் சாதாரண தொண்டனாக 14 வயதில் என்னை இணைத்துக் கொண்டேன். இளைஞர் அணியை ஏற்படுத்தினேன். அதன்பிறகு வட்டபிரதிநிதியாக, மாவட்ட பிரதிநிதியாக, பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, இளைஞர் அணி செயலாளராக, துணை பொதுச்செயலாளராக , பொருளாளராக, செயல் தலைவராக இருந்து இன்று திமுக தலைவராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். 

மக்கள் பணியாற்றுவதில் சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக, இன்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன்.  இப்போது முதலமைச்சர் வேட்பாளராக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். தமிழக மக்களின் கண்களை திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்று பெரியார் சொல்லி இருக்கிறார். அந்த மக்களை நடக்க வைத்தவர் கலைஞர் என்றும் பெரியார் சொல்லி இருக்கிறார்.

கலைஞர் 5 முறை ஆட்சி பொறுப்பில் இருந்த போது எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த பெயரை சூட்டினார். அவர்களுக்காக ஒரு நல வாரியத்தை ஏற்படுத்தி கொடுத்தார். திருநங்கைகளுக்கு நலவாரியத்தை உருவாக்கினார். கிராமங்களில் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம் ஏற்படுத்தி கொடுத்தார்.

அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ பெரியார் பெயரில் சமத்துவபுரத்தை ஏற்படுத்தினார். குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை ஏற்படுத்தி கொடுத்தார்.

கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பெண்கள் சொந்தகாலில் நிற்க சுயஉதவி குழுக்களையும் உருவாக்கினார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு திருமண உதவித்தொகை கலைஞர் ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. மினி பஸ், உழவர் சந்தை, புதிய பட்டதாரிகளுக்கு உதவிகள், சலுகைகள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் ஆகியவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஒரு தாய் பிள்ளையை கவனிப்பது போல கலைஞர் தமிழக மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் செய்துகொடுத்துள்ளார். இப்போது 10 வருடமாக எதிர்க்கட்சியாக இருக்கிறோம். கலைஞர் 5 முறை ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது செய்தவற்றை பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறேன்.

ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி எங்கள் ஆட்சி காலத்தில் இதை எல்லாம் செய்திருக்கிறோம் என்று பட்டியல் போட்டு சொல்வதற்கு அவர் தயாராக இருக்கிறாரா? என்ற கேள்வியை நான் இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக்கொள்ள கடமைப் பட்டு இருக்கிறேன்.

ஆளுங்கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். திமுக வெளியிட்ட அறிக்கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டு இருக்கிறார்கள். பல திட்டங்களை பொய்யாக கூறி இருக்கிறார்கள்.

செய்யமுடியாத காரியங்களை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். வாய்க்கு வந்தபடி பல உறுதிமொழிகளையும் சொல்லி இருக்கிறார்கள். எது நடக்கும்? எது நடக்காது என்று மக்களுக்கு தெரியும். இப்போது இந்த சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குறுதிகளை சொல்லி இருக்கிறீர்கள்.

நீங்கள் ஏற்கனவே 2011-ம் ஆண்டு, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்த போது உறுதிமொழிகள் சொன்னீர்கள். அதெல்லாம் இப்போது எந்த நிலையில் உள்ளது என்று சொல்வதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறாரா? என்கிற கேள்வியை கேட்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

அனைவருக்கும் செல்போன் இலவசமாக கொடுப்போம் என்று ஏற்கனவே கூறினார்கள். யாருக்காவது அதிமுக ஆட்சியில் இலவசமாக செல்போன் கொடுத்து இருக்கிறார்களா? கேபிள் கட்டணத்தை ரூ.70 ஆக குறைப்போம் என்று உறுதி மொழி கொடுத்தார்கள். அதை செய்து இருக்கிறார்களா?

பொது இடங்களில் வைபை வசதி செய்து கொடுப்போம் என்று சொன்னார்கள். செய்து இருக்கிறார்களா? 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னார்கள். எத்தனை வீடுகள் கட்டி கொடுத்திருக்கிறார்கள்.

திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மோனோ ரெயில் விடப்படும் என்று சொன்னார்கள். அது வெறும் பேப்பரில் தான் இருக்கிறது. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் போடப்படாது என்றார்கள். அதை செய்யவில்லை.

ஆவின் பால் லிட்டர் ரூ.25-க்கு தரப்படும் என்றார்கள். இப்போது ரூ.60-க்கு விற்கப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு முக்கியமான உறுதி மொழி கொடுத்தார்கள். நீட் தேர்வை தடுத்து நிறுத்துவோம் என்றார்கள். இதுவரை தடுத்து நிறுத்தப்படவில்லை.

நீட் தேர்வால் 14 பேர் தற்கொலை செய்து இருக் கிறார்கள். நீட் தேர்வுக்காக சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் போட்டு டெல்லிக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அது எந்த நிலையில் இருக்கிறது என்று மத்திய அரசிடம் கேட்க மாநில அரசு தயாராக இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


கழக தலைவர் அவர்கள், கும்முடிபூண்டியில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் திறண்ட மக்கள் வெள்ளம்! #VoteForDMK #VoteForDMKalliance #MKStalin
Image
Image
Image

No comments

Thank you for your comments