Breaking News

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பயணிகள் பார்வையாளர்கள் வெளியேற்றம்

 ஆக்ரா, மார்ச் 4:

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் தாஜ்மஹால் வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள் வெளியேற்றபட்டனர். வெடிகுண்டு குறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினரால்  கடுமையான சோதனையிடப்படுகிறது.



உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் புகழ்பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உள்ளது.  தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக இன்று காலை  மிரட்டல் வந்ததை தொடர்ந்து தாஜ்மஹால் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

மர்ம நபர் ஒருவர் உத்தரபிரதேச காவல்துறையின்  போலீஸ் கட்டுப்பாடு அறையை  காலை 9 மணியளவில் தொடர்பு கொண்டு தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி உள்ளார்.

பின்னர், உடனடியாக போலீசாருக்கு  தகவல் கொடுக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது. உடனடியாக தாஜ்மஹால் நினைவுச் சின்ன வளாகத்த்தில் இருந்த பார்வையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் வெளியேறுமாறு கேட்டுகொள்ளபட்டனர். 

காலை 9:15 மணியளவில் வெடி குண்டு சோதனைகளை மத்திய தொழில்பாதுகாப்பு படை  தொடங்கினர். தாஜ்மஹால் வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, வெடிகுண்டு மிரட்டல் உத்தரபிரதேசத்தில் உள்ள பிரோசாபாத்தில் இருந்து வந்ததாக போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

மதியம் 11 மணிக்கு மேல் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை  மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு பொது ஊரடங்கால் மார்ச் 17ம் தேதி முதல் மூடப்பட்டு இருந்த தாஜ்மஹால் பின்னர் கடுமையான கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் கடந்த செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளுக்காக தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டது.

ஏ.எஸ்.ஐ மதிப்பீடுகளின்படி, தாஜ்மஹாலை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 - 80 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகிறார்கள். 

No comments

Thank you for your comments