அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்காணல்
சென்னை, மார்ச் 4-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியி விருப்பமனு அளித்த வேட்பாளர்களுடன் அதிமுக தலைமையகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று நேர்காணல் துவங்கியது
அதிமுக விருப்ப மனு விநியோகம் புதன்கிழமை (மார்ச் 3) அன்று நிறைவடைந்ததை அடுத்து விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் இன்று வியாழக்கிழமை நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. விருப்ப மனு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட 10 நாள்கள் அவகாசத்தில் மொத்தமாக 8,250 பேர் மனுக்களை அளித்துள்ளனர். விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை மட்டும் 1,000க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்திருந்தனர்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்று காலை 9 மணி முதல் விருப்ப மனு செய்தவர்களுடன் நேர்காணலை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மனுதாரர்களிடமும் நேர்காணல் நடத்தப்பட உள்ளதால், நேர்காணல் இரவு வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. வேட்பாளர்களுடன் நேர்காணல் நிறைவடைந்த பிறகு, அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments
Thank you for your comments