திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு... ஒப்பந்தம் கையெழுத்தானது...
சென்னை, மார்ச் 6:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட மதிமுகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, இன்று (06/03/2021) திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதியிலிருந்து பேச்சுவார்த்தையை தொடங்கியது.
இன்று சென்னை அண்ணா அறிவாலாயத்தில் திமுக - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடையே சட்டமன்ற தொகுதிகள் பங்கீடு தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திமுக உடன் மதிமுகவுக்கு உடன்பாடு ஏற்பட்டது.
2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதிகள் பங்கீடு குறித்த ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தானது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என வைகோ பின்னர் கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.இ.சத்யா, ஏ.கே.மணி, அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர் புலவர் செவந்தியப்பன், ஆட்சிமன்றக்குழு செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அரியலூர் கு.சின்னப்பா, தேர்தல் பணிக் குழுச் செயலாளர் வழக்கறிஞர் ஆவடி இரா.அந்திரிதாஸ் பங்கேற்றனர்.
திமுகழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவரம்
திமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்,
மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்,
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்,
மதிமுக 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அடுத்த சில நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் பங்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments
Thank you for your comments