Breaking News

கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்.... உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் நாடுகள் மறுப்பு...

 புதுடெல்லி :

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என இந்தியா விடுத்த வேண்டுகோளை ஒபெக் மற்றும் கூட்டாளிகள் நிராகரித்துள்ளன. இதனால், வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1 சதவீதம் உயர்ந்து 67. 44 டாலராக உயர்ந்துள்ளது.



வியாழக்கிழமை அன்று பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் கூட்டம் நடந்தது. அதற்கு முன்னர் இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். அப்போது, பெட்ரோலிய உற்பத்திக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை உற்பத்தியாளர்கள் குறைத்துக் கொண்டு, அதிக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல் விலை நிலைபெறச் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 


சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு நாட்டின் பொருளாதாரம் பாதிப்பிலிருந்து மீண்டு உயர்வதை தடுக்கிறது., பொருளாதார வளர்ச்சிக்கான தேவையையும் மட்டுப்படுத்துகிறது எனவும் பிரதான் கூறினார்.

ஒபெக் கூட்டத்துக்குப் பின்னர், இந்தியாவின் கருத்து பற்றி சவுதி ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துல்லாசிஸ் பின் சல்மானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கையில், இந்தியா கடந்த ஆண்டு மலிவான விலையில் வாங்கி சேமித்து வைத்திருக்கும் கச்சா எண்ணெயை எடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

வியாழன் அன்று நடந்த கூட்டத்தில், முந்தைய அளவுக்கு பேட்ரோலியத் தேவை அதிகரிப்பதற்காக காத்திருப்பது என்றும் ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியையும் விநியோகத்தையும் அதிகரிக்க மாட்டோம்  என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதனால், வெள்ளியன்று கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1 சதவீதம் அதிகரித்து 67.44 டாலராக உயர்ந்துள்ளது. ஒபெக் நாடுகள் மற்றும் அதன் கூட்டாளிகளின் முடிவால், பெட்ரோல் விலை தொடர்ந்து உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மாநிலங்களவையில் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் 16.71 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. சராசரியாக ஒரு பேரல் 19 டாலர்களுக்கு வாங்கப்பட்டு உள்ளது. இது ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம், கர்நாடகாவில் மங்களூரூ மற்றும் பாடூரில் உள்ள பெட்ரோலிய பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டு உள்ளது எனக்கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments