400 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
மதுரை, மார்ச் 23-
மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் லெப்டினன்ட் டாக்டர் ராஜகோபால் மற்றும் டாக்டர் பிறையா, மாணவர்கள் தவசி மற்றும் அர்ஜுன் ஆகியோர் கொண்ட குழு 400 வருட பழமையான மதுரை நாயக்கர் கால கல்வெட்டை கண்டுபிடித்தனர்.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு தொடர்பான கள ஆய்வினை மதுரை, அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, அங்குள்ள பாப்பாமடை கண்மாயில் 17ம் நூற்றாண்டை சார்ந்த இரட்டை நீர் அளவை கல்தூண் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இரண்டு கல் தூண்களும் பூமிக்குமேல் பத்தடி உயரமும் ஒன்னறையடி அகலமும் உடையதாக உள்ளது. இந்த இரட்டை கல்லின், ஓர் கல்லில் இரண்டு பக்கங்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
முதலாம் கல் தூணின் தென்புறத்தில் 19 வரிகள் உள்ளன. இதில் முதல் வரியில் மூன்று எழுத்துக்கள் தெலுங்கு மொழியில் மங்கள சொல் வடிவத்தில் உள்ளது. மேலும் இதில் மதுரையை ஆண்ட (ஆறாவது நாயக்க மன்னர்) வீரப்ப நாயக்கர் அய்யன் புண்ணியமாக அழகட்சியார் பிள்ளை நன்றிக்கடனாக செய்து கொடுத்த மடை எனும் பொருள் கொண்ட வரிகள் காணப்படுகின்றன.
முதலாம் கல்தூணின் கிழக்குப் பக்கத்தில் 2வது கல்வெட்டு பாதி சிதைந்த நிலையில் காணப்படுகிறது. அதில் ‘அட்டா லைக்கேக் கண்ட மடை’ என்னும் நான்கு வரிகள் பொருள் தெளிவற்ற நிலையில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டில் எடுத்துரைக்கும் தகவலானது என்ன என்பதை முன்னாள் தொல்லியலாளர், முனைவர் சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பட்டது. இந்த தொல்லியல் பொருள் தொடர்பாக தனிக்குழுவினர் மேலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

No comments
Thank you for your comments