திமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகு ஒதுக்கீடு-உதயசூரியன் சின்னத்தில் போட்டி
சென்னை, மார்ச் 10-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் & அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசியச் செயலாளர் ஜி.தேவராஜன் அவர்களும், இன்று (10-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, தமிழகத்தில் 1 (ஒன்று) சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டு இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த பேச்சு வார்த்தையின்போது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசியக்குழு துணைத் தலைவர் பி.வி.கதிரவன், மத்திய ஐவர் குழு உறுப்பினர் சி.முத்துராமலிங்கம், மத்தியக்குழு உறுப்பினர் எம்.கர்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கர் பாண்டியன் பங்கேற்றனர்.
திமுகழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரியவருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு அளிப்பது நிறைவு பெற்றுள்ளது.
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விவரம்
மதிமுக - 6 தொகுதிகள்
காங்கிரஸ் - 25 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்ட் - 6 தொகுதிகள்
மக்கள் விடுதலை கட்சி - 1 தொகுதி
மனிதநேய மக்கள் கட்சி - 2 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள் - 6 தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 6 தொகுதிகள்
தமிழக வாழ்வுரிமை கட்சி - 1 தொகுதி
ஆதித்தமிழர் பேரவை கட்சி - 1 தொகுதி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3 தொகுதிகள்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 3 தொகுதிகள்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி - 1 தொகுதி


No comments
Thank you for your comments